பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

கொரோனா என்னும் பெருந் தொற்று காரணமாக, உலகமே முடங்கிப் போய் உள்ளது. உயிர் இழப்புகள் மட்டும் இல்லாமல் பொருளாதார இழப்பு உள்ளிட்ட பலவிதமான இழப்புகளை உலகமே சந்தித்து வருகின்றன. 

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், “உலக அளவில் அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக 3.1 கோடி குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளது என்பது, யோசித்துக் கூட பார்க்க முடியாத ஒரு விசயமாக இருக்கிறது” என்று, கடந்த மாதம் ஐ.நா. வெளியிட்ட ஆய்வு அறிக்கையால், அனைத்து தரப்பு மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், பாலின அடிப்படையிலான வன்முறைச் சம்பவங்கள் மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என்றும், இந்தியா போன்ற சில நாடுகளுக்கு பெரும் கவலை அளிக்கும் விசயங்களே நடந்துள்ளது” என்றே ஐ.நா கூறி இருந்தது.

அதே நேரத்தில், ஐ.நா கடந்த மாதம் அறிக்கை வெளியிடும் முன்பே, அதற்கு முன்பு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவைப் பொறுத்த வரை, முன்பை காட்டிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஏதரான குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் பெருகி உள்ளதாகவும் கூறியிருந்தது.

தமிழகத்தில் கூட, கொரோனா ஊரடங்கு காலத்திற்கும் முன்பும், அதற்கு பின்பும் தமிழகத்தில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பான புள்ளி விபரங்களைக் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டன.

ஆனாலும், தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் துளியும் குறையாமல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால், நாடு முழுவதும் கொதித்து எழுந்த பல்வேறு தரப்பினரும் “இந்தியாவில் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை” என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதனால், நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு, பரவலாக எழுந்தது. இதனைக் கவனத்தில் கொண்ட மத்திய அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து, புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் தற்போது வெளியிட்டு உள்ளது. 

பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமானது அனைத்து மாநிலங்களுக்கும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. 

அதில், “பெண்கள் குறித்த புகார்களுக்கு எதிராக உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று, வலியுறுத்தி உள்ளது.

“புகார் பெறப்படும் காவல் நிலைய எல்லைக்கு வெளியே குற்றம் நடைபெற்றிருந்தால், ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும்” என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

முக்கியமாக, “சட்டங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், அவற்றைச் செயல்படுத்தும் காவல் துறை அலுவலர்கள் முறையாகச் செயல்பட வேண்டும் என்றும், சட்டங்களை முறையாக அமல்படுத்தத் தவறும் காவல் துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.