பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்சி பன்னு ஆகியோருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை தலைமை செயல் அதிகாரி ஷிபாசிஷ் சர்கார்  அதிரடி சோதனை நடத்தினர். 


2011ல், அனுராக் காஷ்யப், இயக்குநர் விக்ரமாதித்ய மோத்வானே, தயாரிப்பாளர்கள் விகாஸ், மது மாண்டேனா ஆகியோர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் பாண்டம் பிலிம்ஸ். ஆனால், தயாரிப்பாளர் விகாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால், 2018ல் அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. 


இந்நிலையில், இந்த நிறுவனம் செயல்பட்ட காலத்தில் வருமான வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டதாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஒரு நிறுவனம், வருமான வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டதாக தற்போது சோதனை நடத்தப்படுகிறதா? என பல தரப்பினருக்கும் கேள்வி எழுந்துள்ளது.


தமிழில் ஆடுகளம், ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்த டாப்சி பன்னு அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  


அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு வருமான வரி சோதனை நடத்த மத்திய அரசு வருமான வரித்துறை அதிகாரிகளை பயன்படுத்திக்கொள்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவும் சூழலில், அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்சி  இருவரும் சமீபத்தில் வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


குறிப்பாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த  சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆகியோரும் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டனர்.  மேலும் ரிஹானா, கிரேட்டா தன்பெர்க்கு எதிர்ப்பு தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், நடிகை கங்கணாவுக்கு எதிராக , ” ஒரு ட்வீட் ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது என்று” மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தவர்களை சாடி இருந்தார் டாப்ஸி. 


இவ்வாறு விவசாயிகள் போராட்டத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டதால்தான் இப்போது வருமான வரி சோதனையை எதிர்கொள்கிறார்கள் என்று அனைத்து தரப்பிலும் சொல்லப்படுகிறது.


இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், இந்த வருமான வரி சோதனை வந்த செய்தியை தனது இஸ்டாகிராமில் பகிர்ந்து, நாம் சர்வ அதிகாரத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்று பகிர்ந்துள்ளார். தென்னிந்தியாவில் வேற நடிகைக்கும் இல்லாத துணிச்சலில் மாளவிகா மோகனனுக்கு இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.