தென்னிந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் துல்கர் சல்மான். துல்கர் கைவசம் ஹே சினாமிகா படம் உள்ளது. பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் காஜல் அகர்வால், அதிதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் துல்கர் காரில் தவறான பாதையில் பயணித்து சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார். துல்கர் இதுபோன்று சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. முன்னதாக சக நடிகருடன் இணைந்து கார் ரேஸில் ஈடுபட்டு பெரும் சர்ச்சைக்குள் சிக்கினார்.

துல்கர் சல்மான் சிக்னலை விரைவாக கடக்க வேண்டும் என்பதற்காக தவறான பாதையில் வந்ததாகக் கூறப்படுகின்றது. இதனை தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவும் உறுதிப்படுத்தியுள்ளது. அவ்வீடியோவில், தவறான பாதையில் வந்து நிற்கும் துல்கர் சல்மான் காரை, போலீஸார் ஒருவர் இடைமறித்து பின்னே செல்லும்படி கூறுகின்றார். 

இதனால் ரிவர்ஸிலேயே சென்ற அக்கார் மீண்டும் சரியான பாதையில் பயணித்தது. இந்த சம்பவம் முழுவதையும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்களின் செல்போனில் படம் பிடித்து வெளியிட்டிருக்கின்றனர். இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி, துல்கருக்கு இக்கட்டான சூழ்நிலை உருவாக்கியிருக்கின்றது. துல்கர் சல்மான் பயன்படுத்தியது போர்ஷே பனமேரா டர்போ சொகுசு காராகும். 

துல்கர் மற்றும் மம்மூட்டி இருவரும் பயன்படுத்தும் பெரும்பாலான கார்கள் 369 எனும் பதிவெண்ணைக் கொண்டதாக இருக்கின்றன. இந்த பதிவெண்ணைக் கொண்டே இது துல்கருடையது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆலப்புழாவிற்கு செல்லும் பை-பாஸ் சாலையிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

துல்கர் சல்மானின் இந்த விதிமீறல் செயல் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. 

போலீஸார் இவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. அண்மைக் காலங்களாக கேரளா மோட்டார்வாகனத்துறை அதிகாரிகள் இணையத்தில் வைரலாகும் வீடியோக்களின் அடிப்படையிலும் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். ஆகையால், விரைவில் நடிகர் துல்கர் மீதும் போலீஸாரின் நடிவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகின்றது.