“எனக்குத் தூக்கம் தான் முக்கியம்” என்று, மருத்துவர் அலட்சியமுடன் செயல்பட்டதால், மருத்துவமனை வாசலிலேயே பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த அவலம் இங்கே நடந்துள்ளது.

இப்படி ஒரு அவலம் கர்நாடக மாநிலம் கங்காவதி மாவட்டத்தில் தான் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் கங்காவதி மாவட்டம் கௌரிபூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்குக் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது.

இப்படியான சூழ்நிலையால், அந்த இளம் பெண் கர்ப்பமான நிலையில், கர்ப்பிணியான அந்த பெண்ணுக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக, அந்த பெண்ணுக்கு அதிகாலை 3 மணி அளவில் மிக கடுமையான பிரசவ வலி எடுத்து உள்ளது. இதனால், அந்த பெண்ணின் கணவன், அவரை அருகில் இருக்கும் கௌரிபூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.

அப்போது, அந்த அரசு மருத்துவமனையில் டாக்டர் நாகராஜ் என்பவர், பணியில் இருந்து உள்ளார். அந்த நேரத்தில், அந்த பெண்ணின் கணவனும், அவரது உறவினர்களும், கர்ப்பிணியான அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அந்த டாக்டரை அணுகி உள்ளனர். ஆனால், அந்த டாக்டரோ துளியும் இறக்கம் இல்லாமல், “நான் உறங்கிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று, மிக அலட்சியமாகப் பதில் அளித்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி மற்றும் அவரது கணவன் உட்பட உறவினர்கள் அனைவரும் அந்த டாக்டரிடம் கெஞ்சியதாகத் தெரிகிறது. 

ஆனால், “அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்குள் அனுமதிக்க விடாமல், அந்த டாக்டகர் துளியும் இணங்க மறுத்து உள்ளார். 

அதே நேரத்தில், அந்த கர்ப்பிணி பெண்ணால் வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் துடித்துள்ளார். இதனையடுத்து, கர்ப்பிணி பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். ஆனால், அங்கு மருத்துவமனையின் வாசலிலேயே அந்த கர்ப்பிணிப் பெண், தனது குழந்தையைப் பிரசவித்து உள்ளார்.

ஆனாலும், மருத்துவமனையின் வாசலிலேயே பிறந்த அந்த குழந்தையும், குழந்தை பெற்றெடுத்த அந்த தாயும் தற்போது நலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும், கர்ப்பிணி பெண்ணின் அவசர நிலையைத் துளியும் புரிந்துகொள்ளாமல் மிகவும் அலட்சியமாகச் செயல்பட்ட அரசு டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.