“பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யலாமா?” என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்து உள்ளது.

தற்போது நாட்டில் அதிகரித்துக் காணப்படும் பாலியல் பலாத்கார வழக்குகள் பலவும், நீதிமன்றத்தின் கதவைத் தட்டத் தொடங்கி உள்ளன. அதன் காரணமாக, இது போன்ற பாலியல் பலாத்கார வழக்கில் வித்தியாசமான கருத்துக்களை நீதிமன்றமும் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றன.

அந்த வகையில், “பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யலாமா?” என்பது குறித்து, உச்ச நீதிமன்றம் தற்போது விளக்கம் அளித்து உள்ளது.

அதாவது, ஹரியானா மாநிலம் கர்ணல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதான ஒரு சிறுமி, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த அந்த சிறுமியை, அவரது உறவினர் ஒருவரே பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால், அந்த சிறுமி தனது திருமண வயத்தை எட்டும் முன்பே, கர்ப்பமாகி உள்ளார்.

இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக தங்களது குறிப்பிட்ட அந்த உறவினர் வீட்டிற்கே சென்று நியாயம் கேட்டு உள்ளனர். அப்போது, அவர்கள் இதனை ஏற்க மறுத்துவிட்டு சண்டை போட்டதாகத் தெரிகிறது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். 

அத்துடன், அந்த சிறுமியின் வயிற்றில் வளர்ந்த கருவானது,  26 வார காலமாக வளர்ந்து உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தரப்பில். 26 வார கால கருவைக் கலைக்க அனுமதி வழங்கும் படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியை உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.

அத்துடன், பாதிக்கப்பட்ட அந்த 14 வயது சிறுமி தாக்கல் செய்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை குறித்து முடிவு செய்ய, இந்த வழக்கை வரும் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதே நேரத்தில், “பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்கள், கர்ப்பமாகி 20 வார காலத்திற்குப் பிறகு கருவைக் கலைக்க மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் தடை விதிக்கிறது. 

ஆனால், கர்ப்பம் தொடர்ந்தால் தாய் அல்லது வயிற்றில் வளரும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றும், பதிவு செய்யப்பட்ட மருத்துவர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்தில், இப்படியான சூழ்நிலையில் உருவாகும் கருவைக் கலைக்க இந்திய சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது” என்றும், கூறப்படுகிறது. இதனால், இந்த வழக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.