திரையுலகில் வித்தியாசமான ரோலில் நடித்து வருபவர் ஃபஹத் ஃபாசில். நஸ்ரியாவின் கணவரான இவர், தமிழில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது சஜிமோன் பிரபாகரன் இயக்கத்தில் மலையன் குஞ்சு என்கிற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது. படத்தின் ஸ்டண்ட் காட்சியை படமாக்கியபோது ஒரு கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஃபஹத் ஃபாசில் காயம் அடைந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

படப்பிடிப்புக்காக உருவாக்கப்பட்ட கட்டிடத்தின் மேல் ஃபஹத் ஃபாசில் நின்றிருந்திருக்கிறார். அப்பொழுது அந்த கட்டிடத்தில் இருந்து ஃபஹத் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஃபஹத்தின் முகத்தில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை கொச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஃபஹத் விழுந்ததை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். மலையன் குஞ்சு படத்தை ஃபஹத்தின் தந்தை ஃபாசில் தான் தயாரித்து வருகிறார். சுஷின் ஷ்யாம் படத்திற்கு இசையமைக்கிறார். மகேஷ் நாராயணன் திரைக்கதை எழுதியிருப்பதுடன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். 

மலையன் குஞ்சு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஒரு வாரத்திற்கு முன்பு நிறைவடைந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. காயம் அடைந்த ஃபஹத் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருவதாக ரசிகர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

மலையன் குஞ்சு தவிர்த்து ஃபஹத் திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஜோஜி, அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பாட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இருள் எனும் த்ரில்லர் படத்திலும் நடிக்கிறார். அந்த படத்தில் வெறும் மூன்று கதாபாத்திரங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஃபஹத் நடித்துள்ள மாலிக் படம் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் 20 வயது முதல் 57 வயது வரையான காலத்தில் 4 வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார் ஃபஹத் ஃபாசில்.