மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடக்ஷன் தயாரிக்கிறது. புயல், மழை பாராமல் ஷூட்டிங் பணிகளில் சிலம்பரசன் ஆர்வம் காட்டியது ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. படத்தில் அப்துல் காலிக் என்ற பாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். 

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த டீசரை ஹாலிவுட் படமான டெனென்டின் காப்பி என நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்த விமர்சனத்துக்கு இயக்குனர் வெங்கட் பிரபு அவரது ஸ்டைலில் விளக்கமும் அளித்திருந்தார்.

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

தற்போது மாநாடு திரைப்படத்தின் அப்டேட் தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவு ஒன்றை செய்துள்ளார். எங்கள் குழு சிறந்த படைப்பை அளிப்பதற்கு முழுமூச்சாக பணியாற்றி வருகிறது. படிப்படியாக தக்க நேரத்தில் அப்டேட்டுகள் வந்து சேரும். அதுவரை காத்திருங்கள் என்று பதிவு செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி. சுரேஷ் காமாட்சியின் இந்த பொறுப்பான பதிவு ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு பத்து தல படப்பிடிப்பில் சிம்பு இணைவார் என்று கூறப்படுகிறது. ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. நாற்காலியில் சிலம்பரசன் அமர்ந்திருப்பது போன்று உள்ளது இந்த போஸ்டர். இந்த படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைக்கிறார்.