“பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளத் தயாரா?” என்ற, சர்ச்சைக்குரிய கேள்வியைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெண் தலைவர் பிருந்தா கரத் கடிதம் எழுதி உள்ளார். 

அதாவது, மாகாராஷ்டிரா மாநிலம் உள்ள மின்சார உற்பத்தி நிறுவனத்தில் பணி புரிந்து வரும் மோஹித் சுபாஷ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரைப் பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் படி, மோஹித் சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  

“இந்த வழக்கில் போலீசார் என்னைக் கைது செய்யக் கூடாது” என்று, மோஹித் சுபாஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தொடர்பான விசாரணை நேற்று முன் தினம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, இந்த மனுவை விசாரித்த நீதிபதி, குற்றவாளியைப் பார்த்து, “நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்வீர்களா?”  என்று கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய நீதிபதி, “நீங்கள் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினால், நாங்கள் உங்களுக்கு உதவ முடியும் என்றும், இல்லை என்றால், 
நீங்கள் உங்களது வேலையை இழந்து சிறைக்குச் செல்ல நேரிடும்” என்றும், நீதிபதி மிக கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்த செய்தி, சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்ற நீதிபதியின் இந்த கேள்விக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டன குரல்கள் எழுந்தன.

குறிப்பாக, “பாலியல் வழக்கில் சர்ச்சைக்குரிய கேள்வியை திரும்பப் பெற வலியுறுத்தி” தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெண் தலைவர் பிருந்தா கரத் கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், “இது போன்ற கேள்விகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை உணர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தால், ஜெயிலுக்கு போகாமல் தப்பி விடலாம் என்ற சிந்தனையை உருவாக்கி விடும். இத்தகைய கருத்துகள், பலாத்காரத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்து விடும். இதனால், உங்கள் கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும்” என்றும், அதில் வலியுறுத்தினார்.

அதே போல், இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை டாப்ஸி, “இந்தக் கேள்வியை யாராவது பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் கேட்டார்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

அத்துடன், “பாலியல் பலாத்காரம் செய்தவனை அந்தப் பெண் மணக்க விரும்புவாளா? இதெல்லாம் ஒரு கேள்வியா? இது தீர்வா அல்லது தண்டனையா?” என்று, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார் நடிகை டாப்ஸி. இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.