சகோதரிகள் இருவர் சிகிச்சைக்காக சென்ற போது, போலி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரின் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 48 வயதான சமய் லால் தேவாங்கன் என்பவர், அந்த பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்து உள்ளார். 

இந்த நபர், ஒரு போலி மருத்துவர் என்று கூறப்படுகிறது. இப்படியாக, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலகட்டத்தில், 21, 19 வயதுடைய இரு பெண்கள், சகோதரிகளான அவர்கள் வயிற்று மற்றும் இடுப்பு வலி காரணமாக இந்த போலி மருத்துவரை சந்தித்து உள்ளனர்.

சகோதரிகளின் பெற்றோர் தான், இந்த போலி மருத்துவரான சமய் லாலிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து அவரிடம் சிகிச்சைக்காக அந்த இரு சகோதரிகளும் சென்று வந்திருக்கிறார்கள். 

இந்த நிலையில், அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாந்த்ரீகம் மூலம் அவர்களின் உடல் நல பிரச்சனையைச் சரி செய்வதாகக் கூறி அவர்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இரு பெண்களுக்கும், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், எதையோ சொல்லி மிட்டி வந்த அந்த போலி மருத்துவர், தொடர்ந்து சகோதரிகள் இருவரையும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சகோதரிகள் இருவரும், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த மருத்துவரின் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தங்களுக்கு நேர்ந்து வரும் இந்த பாலியல் கொடுமைகளைப் பற்றி தங்களது பெற்றோரிடம் கூறி உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இரு பெண்களின் பெற்றோர்கள், இது தொடர்பாக அங்குள்ள குதியாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக போலி மருத்துவர் சமய் லால் தேவாங்கன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, ராய்பூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதன் படி, பாலியல் பலாத்காரம் செய்த போலீ மருத்துவர் சமய் லால் தேவாங்கனுக்கு தலா 20 ஆண்டுகள் என 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன், இதனை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.