“ரேசன் கடை மூடலுக்கானப் பணி தொடங்கிவிட்டது” என்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோடி அரசு அறிவித்துள்ள மூன்று உழவர் ஒழிப்புச் சட்டங்கள் உழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றுவது மட்டுமல்ல, ரேசன் கடைகள் மூடும் உள் நோக்கம் கொண்டது என எச்சரித்து வருவதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால்,இந்தியத் தலைமையமைச்சர் மோடியும், அவரது அமைச்சர்களும் “தாங்கள் அவசர சட்டம் போட்டு ஆறு மாதம் ஆகிவிட்டது என்றும், எங்கே கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டன? எங்கே ரேசன் கடைகள் மூடப்பட்டு விட்டன? எதிர்கட்சிகள் வேண்டுமென்றே புரளி கிளப்புகிறார்கள்” என்று “சமத்காரம்” பேசினார்கள்” என்றும், அவர் கூறியுள்ளார்.

“ஆனால், உண்மையில் வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அரசுக் கொள்முதலும் படிப்படியாக கைவிடப்படும் என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக ஞாயவிலைக் கடைகள் மூடப்படும் என்பதையும் எடுத்துக்கூறி வருகிறோம்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“எல்லாம் சிறப்பாக இருப்பதாக மக்களிடம் படம் காட்டிக் கொண்டு தங்கள் உழவர் ஒழிப்புத் திட்டங்களை ஓசையில்லாமல் செயல்படுத்தி வருகிறார்கள் என்பதற்கு மோடி அரசின் செயல்பாடுகளே சான்று” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

“எடுத்துக்காட்டாக, கடந்த 2021 - 2022 ஆம் ஆண்டுக்ககான வரவு செலவு அறிக்கையில் குறைந்தபட்ச ஆதரவு விலையில், வேளாண் விளைபொருட்களைக் கொள்முதல் செய்வற்கான நிதி ஒதுக்கீடு 2020 - 2021ஆம் ஆண்டை ஒப்பிட 25 விழுக்காடு வெட்டப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டான 2019 - 2020 ஐ ஒப்பிட, சென்ற நிதியாண்டில் ஏற்கெனவே 25 விழுக்காடு நிதிவெட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆக மொத்தம், கடந்த 2 நிதியாண்டுகளில் மட்டுமே அரசுக் கொள்முதலுக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய ஆண்டுகளை ஒப்பிட 50 விழுக்காடு வெட்டப்பட்டு விட்டது” தெரியவந்தள்ளது” என்றும், அவர் கவலைத் தெரிவித்து உள்ளார்.

“சென்ற ஆண்டு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நிகழ்ந்த தொழில் முடக்கச் சூழலில், இந்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் ஏழை எளிய மக்களுக்கு விலை இல்லா உணவு தானியங்கள் வழங்கியதால், கொள்முதல் வெட்டு கண்ணுக்குத் தெரியவில்லை. இனி வரும் ஆண்டுகளில் இதனுடைய தாக்கம் தெளிவாகத் தெரியவரும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“மறுபுறம், ஞாயவிலைக் கடைகளுக்கான மானிய ஒதுக்கீட்டை மிகப்பெரும் அளவுக்குக் குறைக்க வேண்டுமென இந்திய அரசின் “நிதி ஆயோக்” அறிவுரை வழங்கியிருக்கிறது என்றும், இச்சிக்கல் குறித்து, நிதி ஆயோக் முன்வைத்திருக்கிற விவாதக் குறிப்பு (Discussion Paper) கசிந்திருக்கிறது என்றும், அப்படி கசிந்த இந்த விவாதக் குறிப்பை கடந்த 28.02.2021 அன்று டெல்லியிலிருந்து வெளியாகும் “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளேடு ஆதாரத்தோடு வெளிப்படுத்தியது” என்றும், அவர் மேற்கொள் காட்டி உள்ளார்.

இப்படியாக, “இந்தியா முழுவதும் குடும்ப அட்டைகளின் வழியாக ஏறத்தாழ 81 கோடியே 35 இலட்சம் பேர் உணவு மானியம் பெற்று வருவதாக அரசின் புள்ளி விளக்கங்கள் கூறுகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில், 1 கோடியே 97 இலட்சத்து 82 ஆயிரத்து 593 குடும்பங்கள் குடும்ப அட்டைப் பெற்றிருக்கின்றன. இந்தக் குடும்ப அட்டைகளில் 1 கோடியே 85 இலட்சத்து 84 ஆயிரத்து 153 அட்டைகள் அரிசி பெறும் அட்டைகளாகும். 60 ஆயிரத்து 827 அட்டைகள் ஞாயவிலைக் கடைகளில் எந்தப் பொருளும் வாங்காமல், அடையாள அட்டைகளாக பயன்படுத்தப்பட்டு வரும் உயர் வருமானத்தினரின் அட்டைகளாகும். 

கடந்த 2013 ஆம் ஆண்டில், இந்திய அரசு பிறப்பித்த உணவு உறுதிப்பாடு சட்டம் (உணவுப் பாதுகாப்பு சட்டம்) தமிழ்நாட்டிற்கு எதிரானது. அதை இங்கே செயல்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“ஞாயவிலைக் கடைகள் வலைப்பின்னல் பிற மாநிலங்களை ஒப்பிட, தமிழ்நாட்டில் மக்கள் பயன்பெறும் வகையில் இருக்கின்றது. இந்திய அரசின் சட்டம் அதை சீர்கெடுத்துவிடும் என்பதால் எதிர்த்தோம்” என்றும், அவர் கூறியுள்ளார்.

“ஆயினும், அச்சட்டப்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய உணவு மானியம் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், அந்த நிதிச் சுமையை தமிழ்நாடு அரசே ஏற்று ஞாயவிலைக் கடைகளை நடத்தி வருகிறது என்றும். 

வாக்குவேட்டை அரசியலுக்காக அனைவருக்கும் விலை இல்லா அரிசி வழங்கி வருகிறது” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

“நம்மைப் பொறுத்தளவில், குடும்பத்திற்கு வேண்டிய அரிசி, பருப்பு, உணவு எண்ணெய், மளிகைப் பொருட்கள். மண்ணெண்ணெய் ஆகிய அனைத்தும் குறைந்த விலையில் ஞாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம். ஆனால், முதியோர், ஆதரவற்றோர் போன்ற மிக நலிந்த பிரிவினராக உள்ள 18 இலட்சத்து 62 ஆயிரத்து 615 அட்டைதாரர்களுக்கு மட்டும் விலை இல்லா அரிசி வழங்கலாம். மற்ற அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி 5 ரூபாய் என்றளவில் விலை வைத்து, மாதம் 35 கிலோ வழங்கலாம்.  

உழவர்கள் உழைத்துப் பயிரிட்ட அரிசியை இலவசமாக வழங்குவது அவர்களது உழைப்பை இழிவுபடுத்துவது மட்டுமின்றி, கொள்முதல் விலையைக் குறைப்பதற்கும் வழிவகுத்துவிடும் என்பதாலேயே இவ்வாறு கூறுகிறோம்” என்றும், அவர் கவலைத் தெரிவித்துள்ளார்.

“அரிசி, உணவு எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அனைத்தையும் குறைந்த விலையில் வழங்கும் வகையில், ஞாயவிலைக் கடைகள் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்கிறோம் என்றும். ஆனால், இந்திய அரசு இதற்கு நேர் எதிர்த்திசையில் நடைபோடுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டின் உணவு உறுதிப்பாடு சட்டம், நகர்ப்புறங்களில் மொத்தமுள்ள குடும்ப அட்டைகளில் 50 விழுக்காட்டினருக்கு மட்டும் மானிய விலையில் அரிசி - கோதுமை வழங்கலாம், அதேபோல் கிராமப்புற அட்டைதாரர்களில் 75 விழுக்காட்டினர்க்கு மட்டும் இவ்வாறு வழங்கலாம் என வரையறுத்தது. 

இன்னெருபுறம், 2015 ஆம் ஆண்டிலிருந்து நிதி ஆயோக் அறிவுரைப்படி பருப்பு வகைகள், பிற புன்செய் தானியங்கள் ஆகியவற்றை ரேசன் கடைகள் வழியாக வழங்குவதை மிகப்பெரும் அளவுக்கு நிறுத்தி விட்டது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இன்றைக்கு ரேசன் கடைகளில் துவரம் பருப்பு மட்டுமே மிகக் குறைந்தளவில் வழங்கப்படுகிறது. மற்றவை அறவே நிறுத்தப்பட்டுவிட்டன. இதுவும் ஒருநாள்
வணிகத்திற்கே போதுமானதாக இல்லாத சூழலில், பருப்பு கிடைக்காத மக்கள் ரேசன் கடை ஊழியர்களோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், இந்திய அரசு இந்த வழங்கலைக் குறைத்துவிட்டது என்பதை பெரும்பாலான மக்கள் அறிவதில்லை.

இப்போது, நிதி ஆயோக்கின் விவாதக் குறிப்புகள் - அரிசி, கோதுமை வழங்குவதை நகர்ப்புறங்களில் 50 விழுக்காடாக இருப்பதை 40 விழுக்காடாகவும், கிராமப்புறங்களில் 75 விழுக்காடாக இருப்பதை 60 விழுக்காடாகவும் குறைத்துவிடலாம், இதன் வழியாக ஏறத்தாழ 10 கோடி பேரை ரேசன் கடையிலிருந்து விலக்கி வைத்துவிடலாம் உணவு மானியத்தில் 47 ஆயிரத்து 229 கோடி ரூபாயை குறைத்துவிடலாம் என்கிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“ஏற்கெனவே 2015 ஆம் ஆண்டு, சாந்தக்குமார் குழு அறிவித்தவாறு மொத்த உணவு மானியம் பெறக்கூடிய குடும்பங்களின் எண்ணிக்கையை இப்போதுள்ள 67
விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக விரைவில் குறைக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் குறிப்பு பரிந்துரைக்கிறது. 

மிக விரைவில் ஞாயவிலைக் கடைகளை மூடப்போகிறார்கள் என்பதற்கான அபாய அறிவிப்பு இது” என்றும், அவர் கலைவயுடன் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் ஞாயவிலைக் கடைகளை சார்ந்துதான் மிகப் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். மற்ற பல்வேறு மாநிலங்களில் ஞாயவிலைக் கடைகளே பெருமளவு செயல்படாததால் அதற்குப் பழக்கப்பட்டுள்ள மக்கள் வறுமையில் உழல்கிறார்கள். ஆனால், ஞாயவிலைக் கடைகள் அதிகம் செயல்பாட்டில் உள்ள தமிழ்நாட்டில் நிதி ஆயோக் பரிந்துரையின் தாக்கம் மிகக் கொடுமையானதாக இருக்கும். 

ஏற்கெனவே, கேஸ் சிலிண்டருக்காக வங்கியில் போட்டுவந்த மானியம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. மறுபுறம், ஒவ்வொரு நாளும் அதன் விலை உயர்ந்து
கொண்டே செல்கிறது. இதே நிலை, ரேசன் கடைகள் வழியாக வாங்கப்படும் பொருட்களுக்கும் ஏற்பட்டால் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் மிகக் கொடுமையாக
இருக்கும்” என்றும், வேதனை தெரிவித்துள்ளார்.

“ஒரு புறம், குடும்பங்களுக்கு 1,000 தருகிறோம் - 1,500 தருகிறோம் எனச் சொல்லிக் கொண்டே மறுபுறம், பெட்ரோல் - டீசல் - எரிவளி விலை உயர்வைப் பற்றி கண்டு கொள்ளாத அரசியலாளர்கள், ஏற்கெனவே ரேசன் கடைகளை பலவீனப்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். 

தமிழ்நாட்டு மக்கள், தங்கள் எதிர்காலம் தங்கள் கையில் தான் என்பதை உணர்ந்து, விழிப்புணர்வு பெற்றே ஆக வேண்டும்; வீதிக்கு வந்தே ஆக வேண்டும்”
என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்  கி.வெங்கட்ராமன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.