கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இதன் படப்பிடிப்பு இன்று (மார்ச் 10) முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. செவன் ஸ்க்ரீன் சார்பாக லலித் குமார் தயாரித்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சீயான் 60 என அழைத்து வருகிறார்கள். இதில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், விக்ரமுடன் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோது இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிவார் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிவார் என்று படக்குழு அறிவித்துள்ளது. பல்வேறு படங்களில் அனிருத் பணிபுரிவதால் இந்தப் படத்துக்கு இசையமைக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹா இணைந்துள்ளார் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வில்லன், குணச்சித்திர பாத்திரம், ஹீரோ என எந்த பாத்திரமாக இருந்தாலும் அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர் பாபி சிம்ஹா. 2012-ம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அறிமுகமானார். 2014-ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. கடைசியாக டிஸ்கோ ராஜா எனும் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். 

புத்தம் புதுக் காலை ஆந்தாலஜியைத் தொடர்ந்து, பாபி சிம்ஹா நடிப்பில் சீறும் புலி, வல்லவனுக்கு வல்லவன், உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் உள்ளன. தற்போது வசந்த முல்லை படத்தில் நடித்துள்ளார் பாபி சிம்ஹா. இவருக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ராஜேஷ் முருகேசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் நடித்தார் பாபி சிம்ஹா. குறும்பட காலத்திலிருந்தே கார்த்திக் சுப்பராஜ் படங்களில்  பாபி சிம்ஹா நடிப்பது அனைவரும் அறிந்ததே. அதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.