தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - அமமுக நேரடியாகவே மோதுவதால், சில சட்டப் பேரவைத் தொகுதிகள் பொது மக்கள் கவனத்தையும், அந்த இரு கட்சியினரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்துள்ளது. 

அதிமுகவில் சசிகலாவின் கைது நடவடிக்கைக்கு பிறகு, அந்த கட்சி இரண்டாக பிரிந்து தொடங்கப்பட்டது தான் அமமுக ஆகும். 

இப்படியான சூழ்நிலையில், சிறைத் தண்டனை எல்லாம் அனுபவித்து சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுக கொடி பொறுத்திய வாகனத்தில் தான் சென்னை திரும்பினார்.

இதனால், அமமுக கட்சியான, இந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக உடன் சேர்ந்து போட்டியிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லியில் இருந்து தமிழகம் வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை தனியாக அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், ஆனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. 

அதன் தொடர்ச்சியாக, சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்தே, அமமுக கட்சி, இந்த தேர்தலில் அதிமுக உடன் சேராமல் தனித்து களம் கண்டு வருகிறது.

அமமுக கட்சியில் இருக்கும் ஒட்டுமொத்த வேட்பாளர்களும், உறுப்பினர்கள் அனைவரும் அதிமுகவினர் என்பதால், இந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - அமமுக நேரடியாகவே சில சட்டப் பேரவைத் தொகுதிகளில் மோதுவதால், பொது மக்கள் கவனத்தையும், அந்த இரு கட்சியினரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்துள்ளது.

அதாவது, 50 பேர் கொண்ட 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக நேற்று வெளியிட்டது. அதில், கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி, இந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியும் அதிக கவனத்தை பெற்று உள்ளது. 

அங்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
 
எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியை எதிர்த்து, அமமுகவின் பூக்கடை என்.சேகர் போட்டியிடுகிறார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து, போடி தொகுதியில் அமமுகவின் எம்.முத்துசாமி போட்டியிடுகிறார்.

குறிப்பாக, அதிமுகவில் சீட் கிடைக்காததால், அந்த கட்சியில் இருந்து விலகி, அமமுகவில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கு சாத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 

திண்டுக்கல் தொகுதியில், திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக, அமமுக சார்பில் ராமுத்தேவர் போட்டியிடுகிறார். 

விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு எதிராக அமமுகவின் ஆர்.பாலசுந்தரம் வேட்பாளராக களம் காண்கிறார்.

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை எதிர்த்து, ஒரத்தநாடு தொகுதியில் அமமுகவின் சேகர் போட்டியிடுகிறார்.

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து, அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரை தேர்தலில் களம் இறங்கி உள்ளார்.

கன்னியாகுமரியில் அதிமுகவின் தளவாய் சுந்தரத்தை எதிர்த்து. அமமுக சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுகிறார். 

மேலும், அமமுக சார்பில் இதுவரை வெளியான 65 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலில், சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேரும், முன்னாள் அமைச்சர்கள் 3 பேரும், 18 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், ஒரு முன்னாள் எம்.பி. மற்றும் ஒரு முன்னாள் மேயர் ஆகியோர் போட்டியிட இந்த முறை அமமுக கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது. இதில், 40 புதிய முகங்களுக்கும் இந்த தேர்தலில் போட்டியிட அமமுக வாய்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.