இயக்குனர் ராமிடம் உதவியாளராக இருந்த மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கதிர், ஆனந்தி நடித்திருந்த அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது கர்ணன் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் தனுஷ், லால் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் கர்ணன் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக கண்டா வரச்சொல்லுங்க பாடல் தெறி ஹிட்டாகியிருக்கிறது. 
இது ஒருபுறமிருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாரி செல்வராஜின் மனைவி திவ்யாவுக்கு வளைகாப்பு நடந்தது. அந்தப் படம் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் தற்போது இந்தத் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. கையில் குழந்தையை வைத்திருக்கும் மாரி செல்வராஜின் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தவிர இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளது தெரியவந்தது. புத்தாண்டை முன்னிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியிருந்தார் துருவ் விக்ரம். 

உடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு ஆகிய தகவல்களை துருவ் விக்ரம் தெரிவிக்கவில்லை. மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது விளையாட்டை மையப்படுத்திய கதை என்றும் செய்திகள் இணையத்தில் வலம் வந்தது.