“அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி 2 முறை உல்லாசம் அனுபவித்தார்” என்று, பாதிக்கப்பட்ட இளம் பெண் தனது வழக்கறிஞர் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த பாஜகவை சேர்ந்த 60 வயதான ரமேஷ் ஜர்கிஹோலி, அங்குள்ள ஒரு ஹோட்டல் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடையுடன் இளம் பெண் ஒருவருடன் ஆபாசமான முறையில் இருக்கும் வீடியோ மற்றும் வாட்ஸ் ஆப்பில் பேசிக்கொண்ட ஆடியோக்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி கர்நாடக மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. 

வட கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், “அணைகள் குறித்து ஆவணப் படம் எடுக்கப் போவதாகவும், அதற்கு அரசு சார்பில் உதவி செய்யுமாறும்” அமைச்சர் ஜர்கிஹோலியை அணுகி இருக்கிறார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறிய அமைச்சர் ஜர்கி ஹோலி, அவருடன் பலமுறை பாலியல் உறவு வைத்துக்கொண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து, “தன் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபணமாகும்” என்றும், அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான், பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோ விவகாரம் குறித்து, கடந்த 24 நாட்களாக போலீசில் புகார் அளிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த இளம் பெண், தனது வழக்கறிஞர் மூலமாக போலீஸ் கமிஷனர் மற்றும் கப்பன்பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

2 பக்கங்களை கொண்ட அந்த புகாரில், பாஜக முன்னால் அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி மீது, பாதிக்கப்பட்ட இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.

அதில், “கர்நாடக அணைகள் பற்றிய ஆவணப்படம் எடுக்க நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்த ரமேஷ் ஜார்கிகோளியை சந்தித்து பேசினேன். அப்போது என்னுடைய செல்போன் எண்ணை அவர் வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பிறகு, அடிக்கடி செல்போனில் என்னை தொடர்பு கொண்டு பேசினார். தான் அமைச்சராக இருப்பதால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறினார். அரசு வேலை வேண்டும் என்றால் நான் சொல்லும்படி கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்றும் ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

இதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன். என்னுடன் செல்போனில் பேசும் போது ஆபாசமாகப் பேசுவார். ஒரு அமைச்சர் என்னுடன் இவ்வாறு பேசியதால், நான் மகிழ்ச்சி அடைந்தேன். டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் இருந்து கொண்டு வீடியோ அழைப்பு மூலமாகப் பலமுறை ரமேஷ் ஜார்கிகோளி என்னிடம் பேசினார். அவ்வாறு வீடியோ அழைப்பில் பேசும் போது ஆடைகளைக் கழற்றி விட்டு நிர்வாணமாக நிற்கும்படி சொன்னார். அவர் கூறியபடி நானும் நடந்து கொண்டேன்.

அரசு வேலை வாங்கி கொடுப்பது தொடர்பாக என்னுடன் பேச வேண்டும் என்று அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வரவழைத்தார். நானும் அங்கு 2 முறை 
சென்றேன். அவர் சொல்வதைக் கேட்டு எல்லாவிதமாகவும் நடந்து கொண்டேன். 2 முறை என்னிடம் அவர் உல்லாசம் அனுபவித்து, அவரது காம இச்சைக்கு என்னை பயன்படுத்திக் கொண்டார்” என்று, பகிரங்மாக குற்றம்சாட்டி உள்ளார். 

“ஆனால், அதன் பிறகு சில நாட்கள் கழித்து அரசு வேலை பற்றி கேட்டால், ஆபாசமாகப் பேசி என்னை திட்ட ஆரம்பித்தார் என்றும். அரசு வேலைக்குப் பதில் பணம் கொடுப்பதாகக் கூறினார்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

இதனால், நான் அதிர்ச்சியடைந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, “இந்த விவகாரம் குறித்து போலீசில் நான் புகார் அளிக்கக் கூடாது என்றும் ரமேஷ் ஜார்கிகோளி என்னை மிரட்டத் தொடங்கினார்” என்றும். அவர் கூறியுள்ளார்.

“அதன் தொடர்ச்சியாக, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அவர் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும், இதன் காரணமாக நான் பயந்து போய் எந்த புகாரும் அளிக்காமல் இருந்தேன் என்றும், இந்த விவகாரத்தில் எனக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் போலீசாரால் பிரச்சினை ஏற்படுகிறது” என்றும், அந்த பெண் கவலைத் தெரிவித்து உள்ளார். 

அத்துடன், “என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த விவகாரம் குறித்து நேரில் வந்து புகார் அளிக்க முடியாமல், நானே எனது கைப்பட புகார் எழுதிக் கொடுத்துள்ளேன் என்றும், எனது சார்பாக எனது வழக்கறிஞர் ஜெகதீஷ் புகார் அளிப்பார் என்றும், அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்றும், பாதிக்கப்பட்ட இளம் பெண், அதில் பதிவு செய்து உள்ளார்.

இந்த விவகாரம், கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.