தொண்டர்கள் தாங்கிப் பிடிக்க இருக்கை மீது நடந்து சென்றது ஏன் என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகறிது. குறிப்பாக சென்னையில் கொட்டித்தீர்த்த மழையால் பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், வேளச்சேரியில் உள்ள வீட்டில் இருந்து டெல்லி புறப்பட தயாராக இருந்த நிலையில் அவரது வீட்டை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.

அப்போது கட்சித் தொண்டர்கள் பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் மீது அவரை ஏற்றி நடக்க வைத்து பின்னர் காருக்குள் அனுப்பினார். இந்த வீடியோவை அக்காட்சியின் இணையதள பிரிவு வெளியிட்டிருந்தது.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் மழை தண்ணீரில் கூட இறங்கி நடக்க தயங்குபவர்கள் எப்படி ஒரு தலைவராக இருக்க முடியும் என்றும், அவர் இருக்கையில் ஏறி நிற்க தொண்டர்கள் அவரை தண்ணீரில் நின்றபடி தாங்கி செல்கின்றனர்.

இது ஒருவிதமான எதேச்சதிகாரம், இதுதான் சமூக நீதியா என்றெல்லாம் அவரை விமர்சித்தனர். தற்போது இது விவாத பொருளாக சமூகவலைத்தளத்தில் மாறியுள்ளது.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு விளக்கம் அளித்திருந்தார். அதில் ‘தண்ணீரில் கால் வைத்தால் வீக்கம் அதிகரிக்கும் என்ற பிரச்சினை இருப்பதாலும், நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் ஒரு தலைவரால் எப்படி தண்ணீரில் நனைந்தபடி எப்படி செல்ல முடியும் என்றும்’ அவர் கூறியிருந்தார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “வேளச்சேரியில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள ஓர் அறையில் தான் எமது தலைவர் திருமாவளவன், கடந்த15 ஆண்டுகளாக தங்கி வருகிறார்.கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் எப்படி கீழ்த்தளம் முழுக்க தண்ணீர் புகுந்ததோ,அப்படி தான் இந்த ஆண்டும். ஒரு தலைவர் நினைத்தால் சொகுசு ஓட்டலில் கூட தங்கலாம்.

ஆனால் அதையெல்லாம் விடுத்து தம்பிகளோடவே தங்குகிறார். முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள் தம்பிகள். இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மம் நிறைந்தவர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்’’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் இருக்கை மீது ஏறிச்சென்றது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

''டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஏர்போர்ட் போகும்போது ஷூ, ஷாக்ஸ் நனைந்து, கால் ஈரத்துடன் விமானத்தில் 3 மணி நேரம் அமரமுடியாதல்லவா? சேறு அறியாத, சகதியை சந்திக்காத காலில்லை என்னுடையது.

மழை வெள்ளத்தில் சென்னையின் எல்லா இடங்களிலும் இறங்கி, சேறு, சகதிகளை அள்ளியிருக்கிறோம். மக்களோடு மக்களாக நின்று பணியாற்றியிருக்கிறோம். அது என்னுடைய வீடு அல்ல. அது எங்கள் அறக்கட்டளை அலுவலகம். மக்களை பார்க்கப்போகும்போது நான் அப்படி செய்யவில்லை. அது சாக்கடைக் கலந்த தண்ணீர்.

அவசரமாக புறப்பட்டபோது, நான் கீழே விழாமலிருக்க தொண்டர்கள் என்னை பிடித்துக்கொண்டனர். தோழர்களை குறைத்து நடத்தும் போக்கு என்பது என்னுடைய இயல்பு கிடையாது.

ஒவ்வொரு மழையின்போது மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து வரும். அந்த சமயங்களில் கூட நான் என் தொண்டர்களை விட்டு அங்கிருந்து சென்றதில்லை.

அடிமைப்படுத்துதல் போன்ற மனநிலை எனக்கு இல்லை என்பது என் மீது குற்றம்சாட்டும் பாஜக போன்ற கட்சிகளுக்கு தெரியும். பேசவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு எங்கள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்'' என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.