தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 25-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

அதிலும் சென்னையில் பலத்த மழை கொட்டியதால் சென்னை நகர், புறநகர் வெள்ளக்காடானது. பல நாட்களாக சென்னையில் வெள்ளம் வடியாத நிலையில் தற்போது ஓரளவு இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது. இதேபோல் கடந்த 13-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது.

நாகர்கோவில், அதன் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ள சேதம் ஏற்பட்டது. மழை காரணமாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் மார்க்கமாக சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டு தற்போது நிலைமை சீரடைந்தது. இதேபோல் டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலத்தின் சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

தற்போதும் தமிழகத்தின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள், நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதில், ரெட் அலர்ட்டை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், அரியலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கனமழை காரணமாக மதுரை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக, திருச்செந்தூர் கோவிலில் மழைநீர் புகுந்தது. இதனால், பிரகாரம் மூழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. தூத்துக்குடியில் 25 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.