சென்னையில் வசிக்கும் மக்களிடம் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்துள்ளது என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரத்தின் இறுதி நாட்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 75 இடங்களில், 6,130 தனி நபர்களிடம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஒரு சர்வே மேற்கொண்டது. அந்த சர்வேயில் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், ‘தெருக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், குடிசை பகுதிகள் அருகில் உள்ள வெளிப்புற பொது இடங்களில் 32 சதவீதம் பேர் சரியாக முகக்கவசம் அணிகின்றனர். மற்ற வெளிப்புற பொது இடங்களில் 35 சதவீதம் பேர் சரியாக முகக்கவசம் அணிகின்றனர்.

Chennai mask

மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற உட்புற பொது இடங்களில் குடிசைப் பகுதிகளில் 14 சதவீதம் பேரும், மற்ற இடங்களில் 21 சதவீதம் பேரும் முகக்கவசம் அணிகின்றனர்.

வணிக வளாகங்களுக்கு வரும் மக்களில் 57 சதவீதம் பேர் முகக்கவசம் அணிந்து வருகின்றனர். மற்றவர்கள் அணிவதில்லை.

கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டதும் முகக்கவசம் அணியும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக தென்பட்டாலும், போகப்போக அப்பழக்கம் குறைந்து விட்டது.

சென்னையில் 54 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ரயிலில் பயணிக்கும் பயணிகள் முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என்று ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. அப்போது ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டவுடன் முகக்கவசத்தை கழற்றி பையில் வைத்திருத்தனர்.

பெட்டிக்குள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று பயணிகள் நினைத்ததுபோல் இருந்தது. டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்களும் ரெயில்வே பாதுகாப்பு போலீசும் முகக்கவசங்களை அணிந்து கொள்கிறார்கள்.

chennai mask

இயல்பு வாழ்க்கை திரும்பியதை அடுத்து சென்னையில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மாஸ்க் அணிவது கணிசமாக குறைந்து உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு வரை 70 சதவீதம் முதல் 80 சதவீதம் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முகக்கவசம் அணிந்து வந்தனர். கடந்த இரண்டு வாரங்களில் இது தலைகீழாக மாறிவிட்டது தெரியவந்துள்ளது.

கொல்லத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் ஏசி பெட்டியில் பயணம் செய்யும்போது பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட பெரும்பாலான பயணிகள் முகக்கவசத்தை அணியவில்லை. பயணிகள் தொற்றுநோய் முடிந்து விட்டதைப் போல நடந்துகொண்டனர்.

பயணிகள் 10 முதல் 12 மணி நேரத்திற்கும் மேலாக முகக்கவசத்தை அணிவது சிரமமாக உள்ளது என்று கூறியுள்ளனர். ஆனால் ரயில் என்பது அலுவலக அறைகளை விட மிகவும் சிறிய மூடப்பட்ட இடம். எளிதில் கொரோனா பரவும் என்பதை உணரவில்லை.

தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மீறும் பயணிகளிடமிருந்து ரயில்வே அதிகாரிகள் அபராதம் வசூலித்தும் வருகிறார்கள். தென்னக ரெயில்வே 39,822 பயணிகளிடம் முகக்கவசம் அணியாததற்கு அபராதமாக 1.98 கோடி வசூலித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.