சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில், ஒரு குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கிராம மக்கள் வேலி அமைத்து பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kambiveli

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் ராஜா என்பவர் கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இவரது வீட்டின் அருகே உள்ள 3 சென்ட் நிலத்தை பொது பாதைக்கு கொடுக்கும்படி  கிராம மக்கள் கேட்டுள்ளனர். ஆனால் ராஜாவோ பட்டா நிலத்தை எப்படி தானமாக அளிப்பது என கூறி அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் இதனால் ஊர்மக்கள் ஒன்றுகூடி ராஜாவின் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே வரமுடியாதபடி,  வீட்டின் வாயில் முன்பு உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கம்பி வேலி அமைத்து உள்ளனர். இதனால் கடந்த ஒரு வாரமாக ராஜாவும் அவரது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் ஊருக்குள் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமலும் ராஜா குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர். 

பட்டா இடத்தில் வழி கேட்டு அதனை கொடுக்க மறுத்து விட்டதால் எனது வீட்டிற்கு முன்பு உள்ள இடத்தில் கம்பி வேலி அமைத்து நாங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வரமுடியாத அளவிற்கு கிராம மக்கள் தடை செய்துள்ளனர்.  இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ராஜா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, அப்பிரச்சனைத் தொடர்பாக கம்பி வேலி அமைப்பதற்கு முன் புகார் வந்தது. கம்பிவேலி அமைத்தபின் புகார் ஏதும் வரவில்லை. நிலம் தொடர்பான பிரச்சனை என்பதால் வருவாய் துறையினர் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

பிரச்சனை தொடர்பாக ராஜா குடும்பத்தினருக்கும், ஊர்மக்களுக்கும் இடையே நிலவும் பிரச்சனைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கராபுரம் வட்டாட்சியர் பாண்டியன் தெரிவித்தார்.