சென்னை மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் பெண்ணின் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

srithar

அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் பெண்ணின் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந்தச் சோதனையால் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அவமானம் ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட பெண், காவல்துறையிடமும் முதல்வரின் தனிப்பிரிவிலும் மனுக்கள் மீது மனுக்கள் அளித்து வருகிறார்.

இந்நிலையில் பெண்ணின் வழக்கறிஞர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது : பாதிக்கப்பட்ட பெண் வெளிநாட்டில் குடும்பத்தோடு தங்கியிருந்து சட்டம் படித்தவர். கடந்த 2015-ம் ஆண்டு அவர், தன்னுடைய குழந்தைகளோடு சென்னை வந்தார். தற்பொழுது  அந்தப் பெண் சென்னையில் குழந்தைகளோடு குடியிருந்து வருகிறார் என்றும் மேலும் எம்என்சி கம்பெனி ஒன்றில் வேலைப்பார்த்து வருகின்றார். இந்தச் சூழலில் கடந்த 11-ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை மாநகர கமிஷனரின் சிறப்பு படை எனக்கூறி இன்ஸ்பெக்டர் ஒருவரும் அவரின் கார் டிரைவரும் அந்தப் பெண் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தனர். பின்னர் செக்யூரிட்டியிடம் தகவலைக் கூறி விட்டு அந்தப் பெண் குடியிருக்கும் 8-வது மாடிக்கு இன்ஸ்பெக்டரும் டிரைவரும் சென்றனர்.

அதனைத்தொடர்ந்து வீட்டுக்குச் சென்ற அவர்கள், பாலியல் தொழில் நடப்பதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. அதனால் வீட்டை சோதனை போட வந்ததாகக் கூறியிருக்கின்றனர். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டின் மூன்று படுக்கை அறைகளிலும் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியிருக்கின்றனர். மெத்தையின் கீழே ஆணுறை இருக்கிறதா என்றும் பார்த்திருக்கின்றனர். இந்த திடீர் சோதனையால் அந்தப் பெண்ணுக்கும் அவரின் குழந்தைகளுக்கும் அவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் எந்த ஆதாரங்களும் கிடைக்காததால் போலீஸார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிட்டனர். இதையடுத்து அந்தப் பெண், மாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீஸார் விசாரித்தபோதுதான் பெண்ணின் வீட்டுக்கு வந்தது விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், அவரின் டிரைவர் எனத் தெரியவந்தது.

மேலும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தங்களை அவமானப்படுத்திவிட்டு சென்ற விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்தப் பெண், முதல்வர் தனிபிரிவுக்கும் கமிஷனருக்கும் புகார் அனுப்பினார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ஆர்டிஐ மூலம் தகவல்களை நீண்ட சட்ட போராட்டத்துக்குப்பிறகு பெற்றியிருக்கிறார். அப்போதுதான் அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒருவரின் தூண்டுதலின்பேரில்தான் போலீஸார், வீட்டுக்கு வந்து சோதனை நடத்தியது தெரியவந்தது. அதுதொடர்பாக விபச்சார தடுப்பு பிரிவு பெண் போலீஸ் அதிகாரியிடமும் போலீஸ் கமிஷனரிடமும் முறையிட்ட போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெண்ணின் வீட்டுக்கு வந்து சோதனை நடத்திய இன்ஸ்பெக்டர் விபச்சார தடுப்பு பிரிவிலிருந்து இடமாறுதலாகிவிட்டார். ஆனால் அவரை போலீஸ் உயரதிகாரிகள் காப்பாற்ற முயற்சி செய்துவருகிறார்கள். தேசிய பெண்கள் ஆணையம், தற்போது சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம் என்றும் பாதிக்கப்பட்ட  பெண் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் தன்னுடைய விவரங்களை வெளியிட வேண்டாம் என்று கூறியபடி பேசத் தொடங்கினார் பாதிக்கப்பட்ட பெண். சம்பவத்தன்று போலீஸார் 50 நிமிடங்கள் வரை வீட்டில் சோதனை என்ற பெயரில் அநாகரீகமாக நடந்துக் கொண்டனர். இதுதொடர்பாக விபச்சார தடுப்பு பிரிவின் பெண் உதவி கமிஷனரிடம் புகாரளித்தபோது அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் ஆர்டிஐ மூலம் தகவல்களைப் பெற்றேன். அப்போதுதான் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் மூலம் என்னை அவமானப்படுத்தியது அதே குடியிருப்பில் குடியிருக்கும் ஒருவர் எனத் தெரியவந்தது. அவர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக என்னை போலீஸார் மிரட்டிவருகின்றனர். எனக்கு நீதி கிடைக்கும் வரை சட்டப்படி போராடுவேன். என்னைப் போல இனிமேல் எந்தப்பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என தெரிவித்தார்.