சென்னை அருகே மின்சார ரயிலில் வீர சாகசம் செய்யும் பள்ளி மாணவ, மாணவியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெற்றோர்களும் கொரோனா தொற்று பதட்டத்துக்கு மத்தியில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில்,முகக்கவசம் அணிந்துகொண்டு அரசுப் பள்ளி, மாணவன் மற்றும் மாணவி இருவர் மின்சார ரயிலில் தொங்கிக் கொண்டு விபரீத செயல்களில் ஈடுபட்டு பயணம் செய்யும்  சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கும்மிடிப் பூண்டியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் புறப்பட்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. உடனடியாக முகக் கவசம் அணிந்த மாணவி ஒருவர் ரயில் படிக்கட்டில் உள்ள கம்பியை பிடித்தபடி சிறிது தூரம் நடைமேடையில் ஓடி வந்து பின்னர் துள்ளிக் குதித்து ரயிலில் ஏறுகிறார். 

ஓடும் ரயிலில் பள்ளி மாணவியின் ஆபத்தான சாகசம்

பின்னர் அதே வேகத்தில் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி தனது ஒரு காலை நடைமேடையில் உரசிய படி சாகச பயணம் செய்கிறார். அதை தொடர்ந்து மாணவர் ஒருவரும் சாகச பயணம் மேற்கொள்கிறார். 

மாணவர்களுக்கு நிகராக பள்ளி மாணவியின் இந்த சாகசம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதால் இதுபற்றி கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகரில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல. ரயில் நிலையத்திற்குள்ளேயே கல்வீசி ஒருவரை ஒருவர் மாணவர்கள் தாக்கிக் கொள்வர். 

ரூட் தல சென்னை மாணவர்கள் சாகசம்

ரயிலில் தொங்கியபடியே கத்திச் சண்டை போட்டு கைதுசெய்யப்படும் மாணவர்கள் ஏராளம். அரசுப் பேருந்துகளில், தொங்கியபடியும், மேலே ஏறிக்கொண்டும் மாணவர்கள் ரூட் தல என்ற பெயரில் ஆபத்தில் ஈடுபடுவது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் கல்லூரிகள் திறக்கும்போது, காவல்துறையினர் மாணவர்களை எச்சரிப்பது வழக்கமான ஒன்றுதான். 

'திருவள்ளூர் ரூட் வீடியோ', 'சென்னை மின்சார ரயில் ரூட் மாணவர்கள்' என்று பள்ளி சிறார்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை செய்யும் அட்டூழியங்கள் அதிகமாகும்.  

ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் , ஓடும் ரயிலிலும் ரயில்வே போலீசார் பயணிக்கின்றனர். ஆனாலும், இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்பதே கசப்பான உண்மை. 

தற்போது மாணவர்களுக்கு இணையாக மாணவி இப்படி ரயிலில் சாகசத்தில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.