தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

மழைநீர் சூழ்ந்து விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து காணப்படுகிறது. எனினும் தொடர்ந்து தமிழகத்தில் கனமழை நீடித்து வருகிறது. இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதை தொடர்ந்து இன்று தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியினால் தமிழக கடலோரப் பகுதிகளில் வடகிழக்கு திசையில் இருந்து வரும் காற்றின் காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கும் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் முதல் கனமழைக்கு ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 28-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று முதல் நவம்பர் 29 வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் நேற்று முதல் அதி கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தென் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான அதிகபட்ச மழை அளவு தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பாக காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 306 மி.மீ. மழை பெய்துள்ளது. இதுவரை பெய்யாத மழை அளவு இதுவாகும்.

தூத்துக்குடியில் நேற்று காலை 10 மணிக்கு இடி, மின்னலுடன் ஆரம்பித்த மழை, இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. மாநகரில் மட்டும் 6 மணி நேரத்தில் 25 புள்ளி 4 சென்டி மீட்டர் மழை பதிவானது. வரலாறு காணாத இந்த கனமழையால், தூத்துக்குடி மாநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. ரயில் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் தூத்துக்குடியிலிருந்து கிளம்பிய வேண்டிய மைசூர், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்ல தாமதமாகின. திருச்செந்தூரில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலையில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்தது.

புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் உள்பிரகாரத்தில் மழைநீர் தேங்கியது. வெளிபிரகாரங்களில் முழங்கால் அளவு தேங்கிய மழைநீரால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.