தமிழ் சினிமாவின் ஆக சிறந்த நடிகராகவும் முன்னணி நட்சத்திரமாகவும் திகழ்கிறார் நடிகர் தனுஷ். அடுத்ததாக கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகி வரும் நானே வருவேன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். மேலும் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்களான ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில் தி க்ரே மேன் மற்றும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முன்னதாக பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் இணைந்து நடித்துள்ள அற்றங்கி ரே படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என வருகிற டிசம்பர் 24ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் கோவாவில்  சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து நடைபெற்ற பிரிக்ஸ் திரைப்பட விழாவில் அசுரன் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் ஜீ வி பிரகாஷ்குமார் இசையில் வெளிவந்த அசுரன் மெகா ஹிட்டானதோடு எண்ணற்ற விருதுகளையும் குவித்து வருகிறது. 

சமீபத்யில் 67 ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படமாக அசுரன் திரைப்படம் விருதுகளை பெற்ற நிலையில் தற்போது நடிகர் தனுஷ் பிரிக்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகராக விருது பெறுவது குறிப்பிடத்தக்கது.