இந்திய திரையுலகின் சிறந்த நடிகையாகவும் முன்னணி நட்சத்திர கதாநாயகியாகவும் வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னதாக மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

மேலும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள குட் லக் சகி வருகிற டிசம்பர் 10-ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இயக்குனர் செல்வராகவன் முதல் முறை கதாநாயகனாக நடித்துள்ள சாணி காயிதம் திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்க்காரு வாரி பாட்டா படத்தில் கதாநாயகியாகவும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து வேதாளம் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாகவும் நடித்து வருகிறார் கீர்த்தி. இதனையடுத்து மலையாளத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் வாஷி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜைடன் தொடங்கியது.

கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து நடிக்க, ஜி.சுரேஷ் குமார் தயாரிப்பில், மேனகா சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ் இணைந்து தயாரிக்க, விஷ்ணு.ஜி.ராகவ் எழுதி இயக்கும் வாஷி படத்திற்கு, ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் வாஷி படத்தின் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டனர். இருவரும் இணைய படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.