கன்னியாகுமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை முதல் மிதமான கன மழை வழ பெய்து வருகிறது. 

அத்துடன், தலைநகர் சென்னையை பொருத்த வரை திடீரென்று கன மழையும், திடீரென்று வெயிலும் மாறி மாறி நிலவி வருகிறது.

இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருவதால், தமிழகத்தில் 12 கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட் இருந்தது. 

ஆனால், தமிழகத்தில் எதிர்பார்த்த படி கன மழை பெய்யவில்லை என்பதால், அந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது என்றாலும், தமிழகத்தில் மழை நீடிக்கும் என்பதால், குறிப்பிட்ட  6 மாவட்டங்களுக்கு மட்டும் கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. 

அத்துடன், வங்கக்கடலில் இன்று உருவாகும் என அறிவிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியானது, சற்று தாமதமாக நாளை உருவாகும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், இந் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

என்றாலும், தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இது மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், இன்றைய தினம் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அத்துடன், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய 27 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 

இதனால், குறிப்பிட்ட இந்த 27 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.