கொரோனா உருமாற்றம் அடைந்து பல்வேறு அலைகளை உருவாக்கி கடுமையான விளைவுகளை  ஏற்படுத்தி வரும் நிலையில், மனிதர்கள் மீதான கொரோனா தாக்கம் முடிவுக்கு வருகிறது என்று ரஷ்ய நிபுணர் ஒருவர் கணித்துள்ளார். 

இது குறித்து ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
‘மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும். அங்கிருந்து புதிய தொற்று இலக்கை எதிர்நோக்கி இருக்கும். 

மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

OMICRON VIRUS END PANDEMIC

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதேபோல் மற்றொரு ரஷ்ய நிபுணர் அனட்டோலி ஆல்ட்ஸ்டீன் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா ஆபத்தானது அல்ல என்றும், உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்ய கமலேயா தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர் பேராசிரியர் அனட்டோலி ஆல்ட்ஸ்டீன் தெரிவித்திருந்தார்.

மேலும் இது குறித்து பேசிய அவர், “உருமாறிய டெல்டா வைரசின் இடத்திற்கு ஒமிக்ரான் வந்து விடலாம் எனவும், இந்த வகை வைரஸ் பரவினால் நோய் கிருமித்தன்மை குறைய வாய்ப்புள்ளதாகவும்” அனட்டோலி ஆல்ட்ஸ்டீன்  குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கொரோனா தொற்று காய்ச்சலுடன் ஒப்பிடத்தக்க நிலைக்கு வந்து விட்டால், இந்த ஒமிக்ரானுடன் பெருந்தொற்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக அனட்டோலி ஆல்ட்ஸ்டீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதே போல் சிங்கப்பூர் அமைச்சகம், ஒமிக்ரான் வைரசுடன் தொடர்புடைய அறிகுறிகள், பிற உரு மாறிய வைரஸ்களைக் காட்டிலும் தீவிரமானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தீவிர நோய் பாதிப்பை உண்டாக்கவில்லை. 

மேலும் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பை முழுமையாக உடைக்கும் சக்தி கொண்டதாகவும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது தலைமைப் பொறுப்பில் இருக்கும் மருத்துவர் மைக்கேல் ரயான் இதனை கூறியுள்ளார். 

அவர் அளித்த பேட்டியில், "ஒமிக்ரான் பற்றி இன்னும் ஆழமாக அறிய வேண்டியது உள்ளது. ஆனால் இதுவரை கிடைத்த முதற்கட்ட தகவலின்படி பார்க்கும்போது ஒமிக்ரான் வைரஸ் டெல்டா உள்ளிட்ட மற்ற திரிபுகளைப் போல் மக்களை தீவிர நோய்க்குத் தள்ளவில்லை. 

முதற்கட்டத் தகவல்கள் ஒமிக்ரான் தீவிர பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதை உறுதி செய்யவில்லை. இருந்தாலும் இது ஆரம்ப காலம் தான் என்பதால் நாம் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒமிக்ரான் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அதேபோல் ஒமிக்ரான் வைரஸால் தடுப்பூசிகள் அளிக்கும் பாதுகாப்பை முழுமையாக ஓரங்கட்டிவிடும் என்பதும் உறுதியாகவில்லை. இப்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் இதுவரை உருவான அனைத்து வகை உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்கொள்வதில் திறன் கொண்டதாக உள்ளது.

OMICRON END PANDEMIC

 தடுப்பூசிகளால் தீவிர நோய்த் தொற்று, மருத்துவமனை சிகிச்சைக்கான அவசியம் ஆகியன குறைந்துள்ளது. ஒமிக்ரானின் ஸ்பைக் புரதத்தில் மட்டுமே 30 வகையான உருமாற்றங்கள் இருப்பதால், இப்போதுள்ள தடுப்பூசிகள் அத்தனையையும் எதிர்க்கின்றனவா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

ஆனால் நிச்சயமாக தடுப்பூசியை முழுமையாக பலனற்றதாக ஒமிக்ரானால் செய்ய இயலாது என்றே தெரிகிறது. எப்போதெல்லாம் புதிதாக ஒரு திரிபு உருவாகிறதோ அப்போதெல்லாம் அது முந்தைய திரிபுடன் போட்டியிட்டு அதிகமாக பரவ முற்படும். தென் ஆப்பிரிக்காவில் டெல்டாவின் தாக்கம் சொற்பமாகக் குறைந்துவிட்ட நிலையில். 

அந்த இடைவெளியைப் பயன்படுத்தி ஒமிக்ரான் பரவுகிறது. அதேபோல் ஒமிக்ரான் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் அதிகமாக தாக்குகிறது என்பதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.

எதுவாக இருந்தாலும் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள இப்போதைக்கு ஒரே ஒரு பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. முகக்கவசம், சமூக இடைவெளியும் அவசியம். கொரோனா வைரஸ் அதன் தன்மையை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. அதன் வீரியத்தில் மாற்றம் இருக்கிறதே தவிர தன்மையில் மாற்றமில்லை. அதனால், இன்னும் ஆட்டம் முடியவில்லை" என்று கூறினார்.