தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கியிருக்கும் நிலையில், கிட்டதட்ட 7,466 பயணிகள் வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் பல்வேறு நிலைகளில் உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. இப்போது ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் மாறியிருக்கிறது.

உலக அளவில் மிரட்டி வரும் ஒமிக்ரான் என்னும் கொடிய வைரஸ், பல்வேறு நாடுகளுக்கு அடுத்தடுத்து வேகமாக பரவி வருகிறது. இதனால், தீவிர கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகளும் மீண்டும் கையில் எடுத்து உள்ளன. 

முக்கியமாக, “இந்த ஒமைக்ரான் வைரசானது, மற்ற வைரஸ்களுடன் ஒப்பிடும்போது படு வேகமாக பரவக்கூடும் என்றும், வீரியமிக்கது” என்றும், உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் தான், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்காக, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணம் முற்றிலுமாக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும், தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பொது மக்களிடம் மேலும் பரவாத வகையில், வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளிடம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 7,466 பயணிகள், அவர்களது வீட்டிலேயே வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 7,466 பயணிகளிடம் வெறும் 9 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், ஆனால் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவில்லை என்றும், முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை என்றாலும், அவர்களை அடுத்த 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும்” என்று, தமிழக சுகாதரத்துறை வலியுறுத்தியுள்ளது. 

“இந்த 7 நாட்களில் அவர்களுக்கு உடல் சோர்வு, சளி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும்” என்றும், மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.