இங்கிலாந்தில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் சமூக பரவலாகத் தொடங்கிவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்து உள்ளார்.

உலக அளவில் மிரட்டி கொண்டிருக்கும் ஒமிக்ரான் வைரஸ், பல்வேறு நாடுகளுக்கு அடுத்தடுத்து பரவி வருகிறது. இதனால் தீவிர கட்டுப்பாடுகளை நாடுகள் கையில் எடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பல்வேறு நிலைகளில் உருமாற்றமடைந்து வேகமாக பரவி கொண்டிருக்கிறது. இப்போது ஒமிக்ரான் என்ற புதிய வகை திரிபாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது.

இது மற்ற வைரஸ்களுடன் ஒப்பிடும்போது படு வேகமாக பரவக்கூடும் என்றும், வீரியமிக்கது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியா, இங்கிலாந்து உள்பட மொத்தம் 46 நாடுகளுக்கு பரவியுள்ளது.  இதனால் தென் ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு விதித்துள்ளது.

ENGLAND COMMUNITY SPREAD OMICRON

இருந்தும் இங்கிலாந்தில் நேற்று வரை 160 பேர் ஒமிக்ரானுக்கு பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.  இங்கிலாந்து நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு மிக தீவிரமுடன் பரவி வருகிறது.  அதனை கட்டுப்படுத்த  பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் நாடாளுமன்றத்தில் பேசும்போது, “இங்கிலாந்தில் 261 பேருக்கு, ஸ்காட்லாந்தில் 71 பேருக்கு, வேல்சில் 4 பேர் என மொத்தம் 336 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சர்வதேச பயணிகளுடன் இவர்களுக்கு தொடர்பு எதுவும் இல்லை.  அதனால் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒமிக்ரான் சமூக பரவல் ஏற்பட்டு உள்ளது என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம்” என கூறியுள்ளார்.

இதன் காரணமாக பொது இடங்களில் செல்வோருக்கு இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் பிரிட்டன் வருவோர் 10 நாட்கள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு 350 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த 10 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாகவும் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

ENGLAND OMICRON COMMUNITY SPREAD

இங்கிலாந்தில் சமூக பரவல் ஆரம்பித்துள்ளதால் உலக நாடுகள் பீதியில் உள்ளன. இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் தீவிரமான முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 

இந்திய நாட்டை பொறுத்தவரை, வருகிற பிப்ரவரிக்குள் ஒமிக்ரான் தொற்றுடன் 3-வது அலை உச்சத்தை எட்டும் என்று கொரோனா கணிப்பு வியூக நிபுணரும், ஐஐடி விஞ்ஞானியுமான மனீந்திரா அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதைபபற்றி  மனீந்திரா அகர்வால் கூறும்போது, "இந்த புதிய ஒமிக்ரான் வைரஸ் வருகிற பிப்ரவரிக்குள் 3-வது அலை உச்சத்தை எட்டும். அப்போது நாட்டில் தினமும் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம்.

ஆனால் இந்த ஒமிக்ரான் வைரஸ், டெல்டா வைரசின் 2-வது அலையை விட மிதமானதாகவே இருக்கும். இப்போதைக்கு புதிய மாறுபாடு அதிக பரவும் தன்மையை கொண்டது என தென்பட்டாலும், அதன் தீவிரம் டெல்டா மாறுபாட்டில் காணப்படுவது போல் இல்லை" என்று தெரிவித்தார்.