விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து குறித்து மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரிக்கு செல்லும் போது, இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 4 பைலட்கள் உள்பட மொத்தம் 14 பேர் நேற்று சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி புறப்பட்டனர்.

அதனத் தொடர்ச்சியாக, அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப் பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மரத்தில் மோதி திடீரென்று விபத்துக்குள்ளானது. இதில், இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவருக்கு மட்டுமே மிகத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு, இந்தியா மட்டும் அல்லாது உலக தலைவர்களும் பிபின் ராவத் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்வார் என்று, நேற்றே அறிவிக்கப்பட்டது.

“ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்படி?” என்பது குறித்து விளக்கம் அளிப்பார் என்றும் தகவல்கள் வெளியானது.

அதன்படி, இன்று காலை நாடாளுமன்றம் கூடிய அடுத்த சில நிமிடங்களில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கைத் தாக்கல் செய்தார். 

அதில், “ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது” என்றும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், “பகல் 12.15 மணிக்கு ஹெலிகாப்டர் தரையிறங்கியிருக்க வேண்டும்” என்று தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், “12.08 க்கு தொடர்பு துண்டிக்கப்பட்டது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

மேலும், “பிபின் ராவத் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்படும்” என்றும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

முன்னதாக, முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் மறைவுக்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.