ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவோர் தங்களுடைய வரலாற்றிலேயே சந்தித்திராத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என புதின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

putin

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. 

இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் மீது முதல்கட்ட பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது.  சர்வதேச அளவில் அவசர நிதி பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்விஃப்ட் முறையையும் அமெரிக்கா துண்டித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து , உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறும் ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்துள்ளதாக சாக்குபோக்கு கூறிவருகிறது. அதே வேளையில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷியா செய்து வருகிறது.

மேலும் இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  அழைப்பு விடுத்துள்ளார். ஆனால்,  இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை.

உக்ரைன் மீது போர் தொடுக்கும் முடிவை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து இருந்தது.  இந்த நிலையில், உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று புதின் தெரிவித்துள்ளார்.  அதேவேளையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவும் புதின் அறிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான பதற்ற நிலையை முன்னிட்டு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று செய்தியாளர்கள் முன் தோன்றி பேசினார்.  அவர், ரஷ்ய மக்கள் போரை விரும்புகிறீர்களா?  இந்த கேள்விக்கு பதிலளிக்க நான் ஆர்வமுடன் உள்ளேன். ஆனால் இதற்கான பதில் ரஷ்ய கூட்டமைப்பின் குடிமக்களாகிய உங்களை சார்ந்து உள்ளது என கூறினார்.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி விட்டது என தகவல்கள் வெளிவருகின்றன.  இந்த சூழலில் புதின் கூறும்போது, உக்ரைன் பகுதி மீது ரஷ்யா ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. எங்களுடைய திட்டம் ஆனது உக்ரைன், ராணுவ நடவடிக்கையை கைவிட வேண்டும்.  உக்ரைனின் நாசிச போக்கை நீக்க வேண்டும். எங்கள் விவகாரத்தில் யாரேனும் தலையிட முற்பட்டால், அல்லது எங்களுடையே நாட்டுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், அதற்கு ரஷ்யா உடனடி பதிலடி கொடுக்கும் என அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். அதன்பின், உங்களுடைய வரலாற்றிலேயே இதற்கு முன்பு நீங்கள் சந்தித்திராத கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.