நெல்லை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 35 திமுக கவுன்சிலர்கள், கேரளாவுக்கு அழைத்து செல்லபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை அதிகமான இடங்களில் அமோக வெற்றிப் பெற்று உள்ளது.

அதாவது, நெல்லை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் திமுக 44 இடங்களில் அபார வெற்றி பெற்றது.

இதில், அதிமுக  4 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. 

அதே போல், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சை உறுப்பினர் ஆகியோர் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர்.

அதன் படி, வெற்றி பெற்ற அனைத்து நெல்லை கவுன்சிலர்களும் வருகிற 2 ஆம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் முதல் கூட்டத்தில் கலந்துகொண்டு, உறுப்பினர்களாக பதவி ஏற்க இருக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து வருகிற 4 ஆம் தேதி மேயர், துணை மேயர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, நெல்லையில் திமுக தனி மெஜாரிட்டியுடன் மாநகராட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், நெல்லை மேயர் பதவியை குறி வைத்து முக்கிய கவுன்சிலர்கள் அங்கு காய் நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், நெல்லையில் சாதாரண ஒரு வேட்பாளரை மேயராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், நெல்லை மாவட்ட திமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அது போல், துணை மேயர் பதவிக்கு பல முக்கிய பிரமுகர்கள் இப்போதே காய் நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுகவைச் சேர்ந்த பல பெண் கவுன்சிலர்களும், தங்களுக்கு துணை மேயர் பதவி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

இவைத் தவிர, சில முக்கிய கவுன்சிலர்களும் துணை மேயர் பதவியை தங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் தான், திமுக கவுன்சிலர்களை யாரேனும் கடத்தி, தாங்கள் வெற்றி பெற அடித்தளம் அமைத்து விடக் கூடாது என்ற நோக்கத்தில், பெரும்பாலான திமுக கவுன்சிலர்களை வெளி மாவட்டங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, நெல்லையில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்களில் கிட்டதட்ட 35 பேர் நேற்று இரவு கன்னியாகுமரி புறப்பட்டு சென்றனர் என்றும், தகவல்கள் வெளியானது. 

ஆனால், தற்போது கன்னியாகுமரி அழைத்துச் செல்லப்பட்ட 35 திமுக கவுன்சிலர்களும் இன்றைய தினம், கன்னியாகுமரியில் இருந்து கேரள மாநிலம் பூவார் பகுதிக்கு சுற்றுலா புறப்பட்டு சென்று உள்ளனர் என்கிற தகவலும் வெளியாகி உள்ளன.

குறிப்பாக,  35 திமுக கவுன்சிலர்களும் கேரளாவில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர் என்றும், அவர்கள் அனைவரும் வரும் 2 ஆம் தேதி உறுப்பினராக பதவி ஏற்கும் போது தான், நெல்லை வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.