தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் ஒரு கிடாயின் கருணை மனு. இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் நடிகர் விதார்த் மற்றும் நடிகை ரவீனா ரவி இணைந்து நடித்து வெளிவந்த ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ரகுராம். தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக அனைவராலும் கவனிக்கப்பட்ட இசை அமைப்பாளர் ரகுராம் திடீரென உடல் நல குறைவு காரணமாக நேற்று அக்டோபர் 29ஆம் தேதி காலமானார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த அவதிப்பட்டு வந்த இசையமைப்பாளர் ரகுராம் அதற்கான தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டார். இருப்பினும் நோயின் வீரியம் அதிகமாகவே சிகிச்சை பலனின்றி ரகுராம் உயிரிழந்ததார். இவரது மறைவு திரை உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்த இசை அமைப்பாளர் ரகுராமிற்கு வயது 38. தமிழ் திரை உலகை சேர்ந்த பிரபலங்களும் இசை கலைஞர்களும் ரகுராமின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கலாட்டா குழுமமும் இசையமைப்பாளர் ரகுராமின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.