யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள மண்டேலா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏலே திரைப்படத்தை போன்று இந்த படத்தையும் விஜய் டிவியில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய, படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

மண்டேலா திரைப்படத்தில் இயக்குனர் பாலாஜி மோகன் முதல் முறையாக க்ரியேட்டிவ் புரொட்யூசராக பணியாற்றியுள்ளார். சங்கிலி முருகன், கண்ணன் ரவி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யோகிபாபுவிற்கு ஜோடியாக அழகிய தமிழ் மகள் என்ற சீரியல் மூலம் பிரபலமான ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த திரைப்படம் அரசியல் நையாண்டிகளுடன் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஐஸ்வையா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் யோகி பாபு. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழில் ரீமேக் செய்யபடுகிறது. இந்த படத்தை ஆர். கண்ணன் இயக்கி வருகிறார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் யோகிபாபு. கடந்த சில நாட்களாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பிலும் யோகி பாபு கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஜோ பேபி என்ற மலையாள இயக்குநர் இயக்கத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களும் பார்த்து உச்சி முகர்ந்து பாராட்டினார்கள். இந்நிலையில் தமிழில் ரீமேக் ஆகும் இந்த திரைப்படம், நிச்சயம் ரசிகர்களிடம் வரவேற்பினை பேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் கர்ணன் படத்திலும் யோகிபாபு நடித்துள்ளார். தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் ஒரு நல்ல ரோலில் யோகிபாபு நடிப்பதாக தகவல்கள் வெளியாகிறது. இருந்தாலும் படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பது நல்லது.