தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக அடுத்தடுத்து அதிரடி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஷால். அடுத்ததாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் மாதம் லண்டனில் துவங்கவுள்ளார். 

மேலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த வரிசையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள லத்தி படத்தில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்து வருகிறார். 

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் சுனைனா கதாநாயகியாக  நடித்துள்ள லத்தி படத்தில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ் இசையமைக்கும் லத்தி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், முன்னணி ஸ்டன்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் ஸ்டன்ட் இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது நடிகர் விஷால் ரிஸ்க்கான ஸ்டன்ட் செய்ததில் காயமடைந்தார்.

இதனையடுத்து அதற்கான சிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால் கேரளாவின் பெருங் கோடு பகுதியில் உள்ள குரு கிருபா ஆயுர்வேத சிகிச்சையில் மையத்தில் சிகிச்சை மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து பூரண குணம் அடைந்து விட்டதாகவும் சில வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் களமிறங்குவதாகவும் இன்று (மார்ச் 7ஆம் தேதி) ஐதராபாத்தில் நடைபெறும் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.