ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் முன்னணி மெகா தொடர்களில் நடிகராக அறிமுகமாகிய கவின் பின்னர் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராகவும் பணியாற்றினார். தொடர்ந்து விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த கவின் தமிழ் திரை உலகிலும் சத்ரியன் & நட்புனா என்னனு தெரியுமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராக களமிறங்கினார்.

முன்னதாக கவின் கதாநாயகனாக நடித்த லிப்ட் திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆனது. இதனை அடுத்து சமீபத்தில் கவின் கதாநாயகனாக நடித்த ஆகாஷ் வாணி வெப் சீரிஸும் பலரது கவனத்தை ஈர்த்தது.நடிகராக மட்டுமல்லாமல் தற்போது உதவி இயக்குனராகவும் பணியாற்றி வரும் கவின் தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். 

அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ஊர்க்குருவி படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனிடையே ஒலிம்பியா மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் ச.அம்பேத் குமார் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் கணேஷ்.கே.பாபு எழுதி இயக்கும் இப்படத்தில் கவின்க்கு ஜோடியாக நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்கிறார். அபர்னா தாஸ் பீஸ்ட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மோனிகா சின்னகொட்லா, ஹரிஷ் குமார் மற்றும் பிரதீப் அண்டனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு எழிலரசு ஒளிப்பதிவு செய்ய ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று (மார்ச் 6ஆம் தேதி) இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.