உக்ரைன் மீது 9 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்த நிலையில், “போரை தற்காலிகதாக நிறுத்துவதாக” ரஷ்யா அறிவித்து உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் இன்று 9 வது நாளாக நீடித்து வந்தது. இன்று அதிகாலை வரை உக்ரைன் நாட்டிற்கு சொந்தமான பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியிருக்கும் நிலையில், ரஷ்யா சார்பில் பாதிக்கு பாதி அளவில் இழங்குப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தன.

அதாவது, ரஷ்யா - உக்ரைன் இடையிலான முதல் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில், அதன் தொடர்ச்சியாக, 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் முதல் முறை ஒத்தி வைக்கப்பட்டு, அதன் பிறகே நடைபெற்றது. 

எனினும், இந்த 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தையிலும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்படாத நிலையில், நேரடி பேச்சு வார்த்தைக்கு வருமாறு புதினுக்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும், உக்ரைன் நாட்டில் வசித்து வந்த இந்தியர்கள் உட்பட மற்ற வெளிநாட்டினர், சொந்த நாடு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கித் தவித்தனர்.

அதனால், உக்ரைன் நாட்டு மக்கள் மட்டுமில்லாமல், மற்ற நாட்டு மக்களும், கடும் சவால்களை கடந்து அங்குள்ள அண்டை நாடுகளுக்கு உக்ரைனில் இருந்து பல லட்சம் பேர் வெளியேறும் நிலையும் ஏற்பட்டது. 

இப்படியான சூழலில் தான், “உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் உள்பட பிற வெளிநாட்டினரை வெளியேற்ற ரஷ்யா தயார்” என்று, ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்ய தூதர் உறுதி அளித்தார்.

இந்த நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத வகையில், “மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக” ரஷியா தற்போது அறிவித்து உள்ளது. 

மேலும், “மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாகவும்” ரஷிய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, உக்ரைனில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்து உள்ளதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி உக்ரைனில் சிக்கி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள், நாடு திரும்ப வழி ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதன் படி, இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியில் இருந்து உக்ரைனில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல், “உக்ரைன் மக்கள் விசா இல்லாமல் அமீரகத்துக்கு நேரடியாக வரலாம்” என்று, அமீரக வெளியுறவுத்துறை அதிகாரி அறிவித்து உள்ளார். அத்துடன், உக்ரைன் நாட்டுக்கு அமீரகம் சார்பில் 50 லட்சம் அமெரிக்க டாலர் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனிடையே, தற்காலிகமாக போர் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாக வெளியான ரஷ்யாவின் இந்த அறிவிப்பு, உலகம் முழுவதும் உள்ள மக்களை பெரும் நிம்மதியடைய செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.