ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவது 45 சதவீதம் குறைவாக உள்ளதாக இங்கிலாந்து ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து சற்று ஓய்ந்தநிலையில், ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாற்றம் அடைந்து யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா இரண்டாம் அலையை உருவாக்கியது.

இந்த இரண்டாம் அலை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பலாம் என நினைத்தபோது கொரோனாவின் அடுத்த உருவமான ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. 

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

omicron hospitalizationகடந்த மாதம் 24 ஆம் தேதி முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் குறைவான நாட்களிலேயே அதிக நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஒமிக்ரான் வகை வைரஸ் கவலைக்குரிய திரிபு என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தி அறிவித்துள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸ் முன்பு உருவான டெல்டா வகை கொரோனா வைரசை விட குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது என்று ஆரம்ப கட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்டா வகை வைரசை விட ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவது 40 முதல் 45 சதவீதம் வரை குறைவாக உள்ளது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் நடத்திய ஆய்வில் கூறி இருப்பதாவது:

“ஒட்டுமொத்தமாக டெல்டா வகை தொற்றுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதற்கான ஆதாரங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். 

டெல்டா வகை வைரசை விட ஒமிக்ரான் தொற்றால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவது 40 முதல் 45 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது” இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.

அதேபோல் ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்விலும் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவது குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

omicron englandதென் ஆப்பிரிக்கா நாட்டில் தொற்று நோய்கள் தேசிய ஆராய்ச்சி மையம் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில், “மற்ற உருமாறிய கொரோனா வைரசுகளுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆபத்து 80 சதவீதம் குறைவு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற கருத்து நிலவி வருவதால், உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளன.

இதற்கிடையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் கூறியதாவது, “பரிசுப்பொருட்களை வாங்க இன்னும் சில மணி நேரங்கள் உள்ளபோதும், நீங்கள் இன்னும் உங்கள் குடும்பத்தினருக்கும், நாட்டிற்கும் சிறந்த பரிசுகளை அளிக்கலாம். 

அது என்னவென்றால் தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான். முதல் டோஸ், இரண்டாவது டோஸ் அல்லது பூஸ்டர் டோஸாக இருக்கலாம். தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்’ என்று போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.