இந்திய திரை உலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் மற்றும் சூர்யா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் ஆல் டைம் ரெக்கார்டாக மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து தயாராகும் தளபதி 67 திரைப்படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இதுபோன்ற தளபதி 67 படத்தின் பல அதிரடி அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், தனது அடுத்த திரைப்படத்தின் கதாநாயகன் யார் என்பதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நமது கலாட்டா ப்ளஸ் சேனலில் நடைபெற்ற தமிழ் சினிமா 2022 ROUND TABLE நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து பேசும்போது, “மாநகரம் திரைப்படத்திற்கு பிறகு எனது அடுத்த திரைப்படம் உறியடி விஜய் உடன் இருந்தது. உறியடி விஜய், ஸ்ரீ மற்றும் சந்திப் ஆகிய மூன்று பேரை வைத்து தான் கல்லூரி தேர்தலை மையப்படுத்தி ஒரு கதை எழுதி இருந்தேன். அது நடப்பது போல இருந்தது ஆனால் நடக்கவில்லை. அதன் பிறகு கைதி இயக்கினேன். மீண்டும் ஒரு இடைவெளி கிடைக்கும்போது அந்த திரைப்படம் செய்ய வேண்டும் என்பதுதான் ஐடியாவாக இருக்கும். இன்று வரை விஜயகுமாருக்கு போன் செய்தால், முதலில் அவர் கேட்பார் “இதை மட்டும் பேசாதே வேறு ஏதாவது சொல்”... ஏனென்றால் இது ஒவ்வொரு வருடமும் சொல்லி சொல்லி தள்ளிப் போனது. ஆனால் அடுத்த வருடம் இது நடந்து விடும் என நினைக்கிறேன். நீண்ட நாட்களாக காத்திருந்து நாம் இயக்க முடியவில்லை என்றாலும் என்னுடைய அசோசியேட் இயக்குனர் இயக்க முடியும். கதை எழுதி முடிந்துவிட்டது. தயாரிப்பாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கதை வசனம் எல்லாம் எழுதிவிட்டேன் அசோசியேட் இயக்குகிறார். அதை நான் தான் இயக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் இப்போது இருக்கும் கமிட்மென்ட்களை பார்க்க வேண்டும் அல்லவா..” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அந்த முழு வீடியோ இதோ…