தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் குறிப்பிடப்படும் நடிகராகவும் விளங்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மறுபுறம் அரசியலிலும் சட்டமன்ற உறுப்பினராக தனது மக்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறார். முன்னதாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் கலகத் தலைவன் திரைப்படம் வரும் நவம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலகத் தலைவன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பாக நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவது இன்றைய காலகட்டத்தில் சாத்தியமா..? ஒரு மாஸ் ஹீரோ அரசியலுக்கு வருவதற்கு என்ன தகுதி வேண்டும்..? அதற்கு அவர் என்ன செய்ய வேண்டும்..? என அவரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு விளக்கமளித்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள், “அரசியலுக்கு வருவதற்கு பெரிய உழைப்பு தேவை. அதற்கு சினிமாவில் வந்து தான் வர வேண்டும் என்று ஒன்றும் கிடையாது. மக்களுக்கு உழைப்பதற்கு ஒரு அர்ப்பணிப்பு தேவை. அதற்கான நேரம் ஒதுக்க வேண்டும். சினிமாவை ஒரு விசிட்டிங் கார்டு மாதிரி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அது மட்டுமே போதாது. சினிமாவிற்கு நாம் சென்றால் இயக்குனர் சீன் பேப்பரை கையில் கொடுத்து விடுவார், ஒளிப்பதிவாளர் நம்மை அழகாக காட்டிடுவார். தேவைப்பட்டால் ஒன் மோர் போகலாம். அது வேறு.. அது நடிப்பு. ஆனால் அரசியலுக்கு வேறு விதமான ஒரு அர்ப்பணிப்பு தேவை. அதை சினிமாவின் மூலமாக அடைந்து விட முடியும் என நான் நம்பவில்லை அதற்கு வாய்ப்பும் கிடையாது!” என பதில் அளித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.