தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா ப்ரோடுக்ஷன் தயாரிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகி வரும் மோகன்தாஸ் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த வரிசையில் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் கட்டா குஸ்தி (தெலுங்கில் மட்டி குஸ்தி). 

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, முனீஸ்காந்த், லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் RT டீம் வொர்க்ஸ் மற்றும் விஷ்ணு விஷாலின் விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். 

இதுவரை நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த வெண்ணிலா கபடி குழு & ஜீவா உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அந்த வகையில் பாரம்பரியமான கட்டா குஸ்தி எனும் குஸ்தி விளையாட்டை மையப்படுத்தி அதிரடியான ஆக்சன் படமாக விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் கட்டா குஸ்தி திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கட்டா குஸ்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனுஷின் வாத்தி, சிலம்பரசன்.TRன் பத்து தல, விஜய் சேதுபதியின் DSP மற்றும் ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அவதார் தி வே ஆஃப் வாட்டர் (Avatar 2) உள்ளிட்ட படங்கள் டிசம்பரில் வெளிவர இருக்கும் நிலையில் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படமும் டிசம்பரில் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

My biggest film till date coming in a big way ♥️#GattaKusthi #MattiKusthi in theatres on the 2nd of December, 2022. pic.twitter.com/WHauzHGPJr

— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) November 11, 2022