பொதுவாகவே படம் பார்த்து கொண்டே உணவு சாப்பிடும் வழக்கம் உலகளவில் பெரும்பாலான மக்களுக்கு பரிச்சையமானவை. திரைப்படங்களுக்கு இடையே இடைவெளி என்று காலம் காலமாக சிற்றுண்டிகளை எடுத்து கொள்வது பார்வையாளர்களின் வழக்கம். முன்பெல்லாம் திரையரங்கின் உள்ளே அவ்வப்போது நொறுக்கு தீனிகளும் கலர் சோடாக்களும் விற்று வந்துள்ளனர்.

சிலர் வீட்டிலிருந்தே சில சிற்றுண்டிகளை எடுத்து வருவதும் இருந்தது. இந்த பழக்கம் மேடை நாடகங்கள் , தெருக்கூத்து பார்த்ததிலிருந்தே இருந்து வந்தது. அவையெல்லாம் மணல் தரைகளுக்கும் கூரை சுவர்களுக்கும் ஏற்புடையதாக இருந்தது. இன்று பல விதங்களில் பார்வையாளர்களை கவரும் விதமாக ஏசி திரையரங்குகள், வித்யாசமான உள்கட்டமைப்பு என்று திரையரங்கு உரிமையாளர்கள் செலவு செய்து தயாரித்து வைத்துள்ளனர். அதன்படி வெளியிலிருந்து கொண்டு வரப்படும் உணவு திரையரங்குகளில் அனுமதி இல்லை என்பது பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த விதிகளிலிருந்து விலகி கடந்த 2018 ஆண்டு ஜம்மு காஷ்மீர் உயர்நீதி மன்றம், படம் பார்க்க வருபவர்கள் அவர்கள் எடுத்து வரும் உணவுப் பொருட்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவிற்கு எதிராக அகில இந்திய திரையரங்க உரிமையாளர்கள் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இது குறித்து மனுதாரர்கள் சார்பாக ஆஜரான  வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை முன் வைத்தனர். அதில் திரைப்படம் பார்க்க வரக்கூடிய நபர்களின் டிக்கெட்டுகளில் வெளி உணவு அனுமதி இல்லை என அந்த டிக்கெட்டில் குறிப்பிடாதவரை உணவு பொருளை கொண்டு வர தடை விதிக்க முடியாது என்றார். அதன்பின் திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் திரையரங்கம் என்பது தனியார்மயமான  ஒரு இடம் அனைவரும் பயன்படுத்த கூடிய பொது இடம் இல்லை. அங்கு தனியார் விதிகளுக்கு உட்பட்டே பொதுமக்கள் இணங்க வேண்டும். அந்த தனியார் பகுதியில் எந்த மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது உரிமையாளர்களுடைய விருப்பத்தை பொறுத்து என்று வாதாத்தை முன் வைத்தார்.

இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தனது உத்தரவை பிறப்பித்தார். அதில், “திரையரங்கம் என்பது பொதுமக்கள் பயன்படுத்த கூடிய தனியார் பகுதியாகும். அதில் எந்த மாதிரியான விதிமுறைகளை விதிக்க வேண்டும் என்பது திரையரங்க உரிமையாளர்களின் விருப்பம். அதில் திரையரங்கிற்குள் உணவு கொண்டு வருவது குறித்த நிலைபாடும் சேரும். அது அவர்களின் வர்த்தக ரீதியான இறுதி முடிவு. ஜிலேபியை வாங்கிகொண்டு படம் ஒருவர் பார்க்க திரையரங்கிற்குள் செல்கிறார் என்றால்  அவர் அதை படம் பார்த்து கொண்டே சாப்பிட்டு விட்டு அங்கே இருக்க கூடிய நாற்காலியில் கைகளை துடைக்க வாய்ப்பு உண்டு.  இதனால் அந்த நாற்காலியும் அந்த பகுதியும் பாழாகிவிடும். அதன்படியும் திரையரங்கிற்குள் வெளி உணவை கொண்டு வர கூடாது என்ற அவர்களின் விதிமுறை  ஏற்புடையதாக உள்ளது அதனால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் திரையரங்க விதிகளை பின்பற்ற வேண்டும்". என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் திரையங்கு வளாகங்களில் சுகாதாரமான குடிநீர் இலவசமாக வழங்கும்படி வசதிகள் வைக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கான உணவை எடுத்து செல்லவும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி திரையரங்கிற்குள் உணவு பொருட்கள் கொண்டு செல்வதற்கான அனுமதி குறித்த உத்தரவு அகில இந்திய திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆகியோருக்கு சாதகமாக அமைந்தது.