தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இயக்குனராகவும் துப்பறிவாளன் 2 படத்தை விரைவில் இயக்கி நடிக்கவுள்ளார். 

இதனிடையே மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து சுனைனா கதாநாயகியாக நடிக்க, இளையதிலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

ராணா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள, லத்தி திரைப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தின் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்களில் நடிக்க இருப்பதால் தளபதி 67 திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என சமீபத்தில் விஷால் தெரிவித்தார்.

இதனிடைய தற்போது நடைபெற்ற லத்தி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட போது மேடையில் பேசிய நடிகர் விஷால், “லோகேஷ் கனகராஜ் என்று சொன்னதுமே நீங்கள் எல்லோரும் என்ன எதிர்பார்ப்பீர்கள் என்று எனக்கு தெரியும். அதற்கு பதில் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். லோகேஷ் கனகராஜை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதேசமயம் லோகேஷ் மேல் மிகவும் பொறாமையாகவும் இருக்கிறது. விஜய் அவர்களை வைத்து நீங்கள் இயக்குகிறீர்கள் என்று… விரைவில் கடவுள் புண்ணியத்தில் நானும் தளபதி விஜய்க்கு கதை சொல்லி லோகேஷ் எப்படி விஜய் வைத்து படம் இயக்குகிறாரோ அதேபோல் நானும் ஒரு நல்ல படம் இயக்குவேன்” என விஷால் தெரிவித்துள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…