பாக்ஸ் ஆபிஸை அதிரவிடும் ஷாரூக் கான் - அட்லீயின் ஜவான்... உலக அளவில் முதல் வார கலெக்ஷன் ரிப்போர்ட் இதோ!

ஷாரூக் கானின் ஜவான் படம் 7 நாட்களில் 660 கோடி வசூலித்துள்ளது,shah rukh khan in jawan movie crossed 660 crores | Galatta

முதல்முறையாக இயக்குனர் அட்லீ - பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் கூட்டணியில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் வாரம் முழு வசூல் விவரம் தற்போது வெளிவந்துள்ளது. உலக அளவில் பல கோடி ரசிகர்களைக் கொண்ட இந்திய சினிமா நட்சத்திரமாக விளங்கும் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பதான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலுக்கு மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் ஜவான் திரைப்படமும் அந்த சாதனை மைல்கல்லை நோக்கி பயணிக்கிறது. இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கி ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் அட்லீ. 

தொடர்ந்து தனது 2வது படத்திலிருந்து தளபதி விஜய் உடன் கைகோர்த்த இயக்குனர் அட்லீ தெறி, மெர்சல் & பிகில் வரிசையாக 3 பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லீ, ஷாரூக் கானின் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அதிரடியான என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ள ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகி. ஜவான் படம் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்க ராக்ஸ்டார் அனிருத்தும் இணைந்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடிக்க, பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜவான் படத்தின் ரிலீஸுக்குத் முன்பாக தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக செய்திகள் பரவின. ஆனால் படத்தில் தளபதி விஜய் இல்லாதது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. GK.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள, ஜவான் திரைப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். 

இந்திய சினிமாவில் இந்த 2023 ஆம் ஆண்டில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த படங்களில் ஒன்றாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக கடந்த செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸான ஜவான் படம் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. முதல் நாளிலேயே 129 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த ஜவான் திரைப்படம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஒவ்வொரு நாட்களிலும் 100 கோடிக்கும் மேல் வசூலித்து, முதல் 4 நாட்களில் 520. 79 கோடி ரூபாய் வசூலித்தது. ஷாருக்கானின் முந்தைய படமான பதான் திரைப்படம் மொத்தமாக 1050 கோடிகளுக்கு மேல் வசூலித்த நிலையில் இந்த சாதனையை ஜவான் படம் முறியடிக்குமா என திரை உலகம் தற்போது எதிர்பார்க்கிறது. 

இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தின் முதல் வார வசூல் விவரம் தற்போது வெளிவந்திருக்கிறது. நேற்று செப்டம்பர் 13 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி இருக்கும் ஜவான் திரைப்படம் மொத்தமாக 660.03 கோடி வசூலித்திருப்பதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேகத்தில் நகர்ந்தால் அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் ஜவான் படம் ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

View this post on Instagram

A post shared by Atlee (@atlee47)