தமிழ் திரையுலகின் பிரபல பாடகர்களில் ஒருவராக வலம் வந்த பாடகர் பாம்பா பாக்யா நேற்று செப்டம்பர் 1ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த ராவணன் திரைப்படத்தில் இடம்பெற்ற “கிடா கிடா கறி” பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாம்பா பாக்யா காலடி எடுத்து வைத்தார்.

தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலேயே அதிகம் பாடியுள்ள பாம்பா பாக்யா, தளபதி விஜயின் சர்க்கார் படத்தில் இடம்பெற்ற சிம்டாங்காரன், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 2.O திரைப்படத்தில் புள்ளினங்காள், விஜயின் பிகில் படத்தில் இடம்பெற்ற காலமே உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.

குறிப்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையில் வெளிவந்த ராட்டி பாடல் மூலம் மிகப் பிரபலமடைந்த பாம்பா பாக்யா, பார்த்திபனின் இரவு நிழல் திரைப்படத்திலும் பாடியுள்ளார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முதல் பாடலாக  வெளிவந்த பொன்னி நதி பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று செப்டம்பர் 1ஆம் தேதி இரவு உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாம்பா பாக்யா மாரடைப்பு காரணமாக காலமானார். தனது தனித்துவமான குரலால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பாடகர் பாம்பா பாக்யா மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 

Popular singer #BambaBakya has passed away 💔#RIPBambaBakya pic.twitter.com/Sb5tDMVLIJ

— Galatta Media (@galattadotcom) September 2, 2022