புதுச்சேரியில் தினத்தந்தி - யுவர் பேக்கர்ஸ் சார்பில் பொது மக்களுக்கு மஞ்சள் பை இலவசமாக வழக்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் மஞ்சள் பையை பயன்படுத்தும் திட்டமானது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

ஆனால், அதற்கு முன்பாகவே “யுவர் பேக்கர்ஸ்” என்னும் தனியார் அமைப்பின் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வானது, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

Manjal

எனினும், தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் அதன் கழிவுகளால் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருவதாக, சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைத் தெரிவித்து வந்தனர்.

இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய - மாநில அரசுகள், இது தொடர்பாக பலகட்ட நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இறங்கின.

அதன் படி, புதுச்சேரி முழுவதும் அம்மாநில அரசு சார்பில் மலிவான மற்றும் தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களை உபயோகத்திற்கு எதிராக தீவிர பிரசாரங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன. 

அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள கடற்கரை, அரசு அலுவலகங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் அங்குள்ள பொது இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த அதிரடியாக தடையும் விதிக்கப்பட்டது.

இந்த சூழலில் தான், “தினத்தந்தி - யுவர் பேக்கர்ஸ்” என்ற தனியார் அமைப்பு இருவரும் இணைந்து, பொது மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொது மக்களுக்கு இலவசமாகவே “மஞ்சள் பை” வினியோகம் செய்யும் அறிமுக விழா நடைபெற்றது. 

அதாவது, பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்காக பொது மக்களுக்கு வழங்க உள்ள மஞ்சள் பை அறிமுக விழா, புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள ஓட்டல் அண்ணாமலை தர்பார் ஹாலில் நடைபெற்றது.

இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, மஞ்சள் பையை அறிமுகப்படுத்தி, பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசினார். இந்த விழாவில் “யுவர் பேக்கர்ஸ்” பவுண்டேசன் நிறுவனர் கிருஷ்ணராஜூ மற்றும் அதன் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

இந்த விழாவில் “யுவர் பேக்கர்ஸ்” பவுண்டேசன் நிறுவனர் கிருஷ்ணராஜூ பேசும் போது, “புதுமை மண், புண்ணியமிக்க பூமி” என்று, நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பிளாஸ்டிக் இல்லாத நல்ல பூமியை எதிர்கால சந்ததிக்கு விட்டுச் செல்வோம்” என்றும், நம்பிக்கைத் தெரிவித்தார்.

அத்துடன், “சிங்கப்பூர், மலேசியாவை உதாரணம் காட்டுவது போல், உலக நாடுகள் வியக்கும் மாநிலமாக புதுச்சேரி மாற வேண்டும்” என்றும், தனது ஆசையையும், “யுவர் பேக்கர்ஸ்” பவுண்டேசன் நிறுவனர் கிருஷ்ணராஜூ வெளிப்படுத்தினார்.

“மஞ்சள் பை” அறிமுக விழாவை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள மார்க்கெட், உழவர் சந்தை உள்பட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், “யுவர் பேக்கர்ஸ்” சார்பில், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் “மஞ்சள் பை” யை, பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

குறிப்பாக, இன்றைய தினம் 30 ஆம் தேதி சனிக் கிழமை வெளியான “தினத்தந்தி” பேப்பருடன் இலவசமாக “மஞ்சள் பை” வழங்கும் சீரிய முயற்சியை “யுவர் பேக்கர்ஸ்” அமைப்பு, கையில் எடுத்து உள்ளது. அதன்படி, இன்றைய தினம் “தினத்தந்தி” பேப்பர் வாங்கிய அனைத்து பொது மக்களுக்கும் “யுவர் பேக்கர்ஸ்” சார்பில் வழங்கப்பட்டிருந்த  “மஞ்சள் பை” இலவசமாக வழங்கப்பட்டது. இந்த “மஞ்சள் பை” யை பெற்றுக்கொண்ட பொது மக்கள் பலரும், தங்களது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.