தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வைகைப்புயல் வடிவேலு மற்றும் சின்ன கலைவாணர் விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் போண்டாமணி தற்போது சிறுநீரக செயலிழப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் போண்டாமணிக்கு சிறுநீரக செயலிழப்பு கண்டறியப்பட்டு அதற்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் நடிகர் போண்டா மணியின் இந்த சிகிச்சைக்காக தமிழக அரசு உதவிக்கரம் நீட்டி முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து விஜய் சேதுபதி, தனுஷ் மற்றும் நடிகர்கள் சங்கம் மற்றும் பலரும் போண்டா மணியின் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கினர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போது நடிகர் போண்டாமணிக்கு உதவும் வகையில் ராஜேஷ் பிரித்தீவ் எனும் நபர் ஒருவர் தேவையான சிறு சிறு வேலைகளை செய்து கொடுத்துள்ளார். எனவே போண்டா மணியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை போண்டா மணிக்கு தெரிந்தவர் என நம்பியுள்ளனர். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த போண்டா மணிக்கு மருந்துகள் வாங்கி வருவதாகவும் வங்கி கணக்குகளை ஸ்டேட்மெண்ட் எடுத்து வருவதாகவும் சொல்லி போண்டா மணியிடம் இருந்து ஏடிஎம் கார்டை பெற்று சென்ற அந்த நபர் ஒரு குறிப்பிட்ட நகை கடையில் ஒரு லட்ச ரூபாய்க்கு நகை வாங்கியுள்ளார்.

ஒரு லட்ச ரூபாய்க்கு தனது வங்கி கணக்கில் இருந்து நகை வாங்கப்பட்டுள்ளதாக போண்டா மணியின் செல்போனுக்கு மெசேஜ் வரவே உடனடியாக தங்களது ஏடிஎம் கார்டை பிளாக் செய்து தொடர்ந்து அதிலிருந்து பணம் எடுக்க முடியாமல் தடுத்துள்ளனர். இதனை எடுத்து காவல்துறையிடம் போண்டா மணியின் குடும்பத்தினர் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு பண மோசடி செய்த அந்த நபரை கைது செய்துள்ளனர். 

ஏற்கனவே உடல் நலக்குறைவால் மிகுந்த வேதனையில் இருக்கும் போண்டா மணி மற்றும் குடும்பத்தினருக்கு மேலும் தலைவலி கொடுக்கும் விதமாக நபரொருவர் பண மோசடி செய்துள்ளது, போண்டா மணியின் குடும்பத்தினரிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
 

போண்டா மணியை ஏமாற்றிய நபர்..!!#Bondamani #ATMCard #GalattaNews pic.twitter.com/VWqceZqtAa

— Galatta Media (@galattadotcom) October 7, 2022