பாலிவுட் திரை உலகின் மூத்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் அருண் பாலி காலமானார். பாலிவுட்டில் நடிகர் அக்ஷய் குமார் கதாநாயகனாக அறிமுகமான சாந்திப்பிரியா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகர் அருண் பாலி பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் மிக முக்கிய வேடங்களில் நடித்தார்.

குறிப்பாக பிரபலமான தொலைக்காட்சி தொடர்களான சானக்கியா, மகாபாரதம், சக்திமான், கும்கும் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த அருண் பாலி ஷாருக் கான், சஞ்சய் தத், அக்ஷய்குமார், அமிதாப் பச்சன், அணில் கபூர், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன், ஆமிர் கான், ரன்பீர் கபூர் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்தவர்.

ராஜு பான் கயா ஜென்டில்மேன், கல்நாயக் ஜமீன், 3 இடியட்ஸ், பர்ஃபி, PK என குறிப்பிடப்படும் ஹிந்தி திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த அருண் பாலி, சமீபத்தில் வெளிவந்த அக்ஷய்குமாரின் சாம்ராட் ப்ரித்விராஜ் மற்றும் ஆமீர்கானின் லால் சிங் சத்தா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹேராம் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் அருண் பாலி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அருண் பாலி தனது 79வது வயதில் தற்போது காலமானார்/ இவரது மறைவுக்கு இந்திய திரையுலகைச் சார்ந்த பல முன்னணி பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.