'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் வித்யாசமான கதைக்களத்தை கையாண்டு சமூக அவலங்களை பேசி பிரபலமான இயக்குனர் எச். வினோத். பின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ நடிகர் கார்த்தியின் நடிப்பில் இயக்கி அதிரடியான திரைக்களத்தை கச்சிதமாக ரசிகர்களுக்கு விருந்தளித்தார் அதன் பின் முக்கிய இளம் இயக்குனர் பட்டியலில் இணைந்தார் வினோத். தொடர் வெற்றியை அடுத்து தமிழ் சினிமாவின்  உச்சநட்சத்திரம் நடிகர் அஜித் உடன் இணைந்து போனி கபூர் தயாரிப்பில் பாலிவுட் ‘பிங்க்’ படத்தை ரீமேக் செய்து 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் இயக்கினார்.

அதன் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் ‘வலிமை’ படத்தை கொடுத்தவர். தற்போது மூன்றாவது முறையாக கூட்டணியமைத்து வரும் ஜனவரி 11 ம் தேதி வெளிவரவிருக்கும் படம் 'துணிவு' . வங்கி கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படத்திற்கான முன்பதிவு மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில்  ரசிகர்கள் ஒருபுறம் படத்தின் வெளியீட்டை தீவிரமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஓம் விஜய் இயக்கத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் மூலிகை வைத்தியம் தொடர்பாக உருவாகியுள்ள ‘வெள்ளிமலை’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலைவாழ் மக்கள் குறித்தும் நாட்டு வைத்தியம் மற்றும் தமிழ் மொழியின் சிறப்பு குறித்தும் பேசினார். மேலும் H.வினோத் என்று ஆங்கிலத்தில் இனிஷியல் போட்டிருந்த அந்த இயக்குநர், நான் சொன்ன பிறகு தான் தமிழில் அதனை எச்.வினோத் என மாற்றியுள்ளார் என்று தெரிவித்தார். மேலும் ஒரு எழுத்தைக் கூட தமிழில் மாற்ற முடியாத தமிழன், நாட்டை எப்படி மாற்ற முடியும் என்றும் அவர் பேசியிருந்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான  சீமான் தமிழ் குறித்தும் தமிழர் குறித்தும் தீவிரமாக பேசி வருபவர். பல இடங்களில் இவரது பேச்சு பல மாற்றங்களுக்கு உறுதுணையாக நின்றது. தமிழ் மொழி கொள்கை குறித்து சீமான் பேசிய வீடியோ பல முறை வைராலனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துணிவு படம் வெளிவருவதையொட்டி எச். வினோத் இனிஷியல் தொடர்பாக பேசிய வீடியோவும் வைரலாகி வருகின்றது.