மலையாள நடிகர் நிவின் பாலி உடல் இளைத்து மீண்டும் பழைய ஃபார்ம்-க்கு வந்திருக்கும் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வலம்வந்துகொண்டிருக்கின்றன.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்துகொண்டிருப்பவர் நிவின் பாலி. மலையாளத்தில் 2010ம் ஆண்டு வெளியான 'அமர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழில் இவர் நடித்து 2013ம் ஆண்டு வெளியான 'நேரம்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல் மலையாளத்தில் மீண்டும் அல்போன்ஸ் புத்திரனுடன் இணைந்து இவர் கதாநாயகனாக நடித்திருந்த 'பிரேம்' திரைப்படம் அவரது திரைவாழ்க்கையில் மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது.

மலையாள சினிமா ரசிகர்களையும் சேர்த்து தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பிரேம் மூலம் நிவின் பாலி பரிச்சயமானவர் ஆனார். இதற்கடுத்து அவர் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில், இயக்குநர் ராமின் இயக்கத்தில் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழில் இவர் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் இது.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட தமிழின் மிகமுக்கிய படைப்புகள் மூலம் சிறந்த இயக்குநராக அறியப்படும் ராமின் கூட்டணியில் நிவின்பாலி களமிறங்கவிருப்பது தமிழ்த் திரைத்துறையில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நிவின் பாலியுடன் அஞ்சலி, சூரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் பெயர் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.

திரைத்துறைக்குள் நுழைந்திலிருந்து ஹீரோவுக்கான லுக்கில் தனது உடல் எடையைக் கட்டுக்கோப்பாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிவின் பாலி, அண்மையில் உடல் எடை கூடியது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் கலந்துகொள்ளும் சினிமா நிகழ்ச்சிகளிலிருந்து வெளியாகும் அவரது புகைப்படங்கள் காண்போரை அதிர்ச்சியடையவைத்தன.

ஏதேனும் படத்தின் கதாபாத்திரத்திற்காக உடல் எடையை நிவின் பாலி அதிகரித்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் உடல் உபாதை காரணமா என்று சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அவர் உடல் எடையைக் குறைத்து தற்சமயம் இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nivin pauly new look getting viral in social media ezhu kadal ezhu malai