அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா திரைப்படம் ரஷ்யாவில் வரலாற்று வசூல் சாதனை புரிந்துவருகிறது. இதனால் 'புஷ்பா 2' படம் மீதான் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மற்றும் முட்டம் செட்டி மீடியா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கார்த்திக் ஸ்ரீனிவாஸ், ரூபன் ஆகியோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஊ சொல்றியா மாமா', 'வாயா சாமி', 'ஸ்ரீவள்ளி' உள்ளிட்ட அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பயங்கர ஹிட் அடித்தன.

சந்தனமரக் கடத்தலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருந்தது. படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜுன் காட்டின் சந்தனமரங்களைக் கடத்தும் கடத்தல் காராகவும், ஃபஹத் ஃபாசில் அதைத் தடுக்கும் வனத்துறை அதிகாரியாகவும் நடித்திருந்தார். டிரெய்லர் வெளியீட்டின் போதே படத்தின் வசனங்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இத்திரைப்படம், வெளியாகி பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. சுமார் 170 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் மொத்தமாக 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. 

இந்நிலையில், ரஷ்யாவில் திரையிடப்பட்ட 'புஷ்பா: தி' ரைஸ் திரைப்படம் இந்தியாவைப் போலவே அங்கும் வசூலில் பேயாட்டம் ஆடி வருவதாக இப்படத்தின் விநியோகஸ்தர்களில் ஒன்றான E4 Entertainment நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

அதாவது, ரஷ்யாவில் சுமார் 774 திரையரங்குகளில் புஷ்பா திரைப்படம் தொடர்ந்து 25 நாட்களாக வெற்றிநடை போட்டுவருவதாகவும், இதுவரை 10 மில்லியன் ரூபில் வசூல் செய்து(இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1.14 கோடி) சாதனை புரிந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. இது அங்கு திரையிடப்பட்ட இந்தியப் படங்கள் செய்த வசூலில் அதிகமானதாகப் பார்க்கப்படுகிறது. 

புஷ்பா படத்தின் முதல்பாகம் வெளியாகி வெற்றியடைந்த நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்து காணப்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவில் புஷ்பா படத்தின் முதல் பாகம் செய்துள்ள வசூல்வேட்டை, அப்படத்தின் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. 

புஷ்பா படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் அக்டோபரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு லொகேஷன் தேர்வு உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை உருவாவதிலும் தாமதம் ஏற்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைந்து வெளியாகவேண்டும் என்பதே அப்படத்தின் முதல் பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

புஷ்பா படத்தின் ரஷ்ய வசூல் குறித்து E4 Entertainment நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு. 

#PushpaTheRise is a RAGE in Russia ❤️‍🔥

25 days and counting of successful run in 774 screens with a collection of over 10M Rubles 🔥🔥#ThaggedheLe takes over Russia 💥

Icon Star @alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @MythriOfficial @4SeasonCreation pic.twitter.com/lkrrhDK3Z8

— E4 Entertainment (@E4Emovies) January 2, 2023