இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் கோடியில் ஒருவன். விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மீகா நடித்துள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு உதய குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 

இந்த படத்தின் டீஸருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் டியூஷன் மாஸ்டராக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. ஆக்ஷன் அதிரடி நிறைந்த இந்த படத்தில் கே.ஜி.எஃப் பட புகழ் கருடா ராமசந்திர ராஜு முக்கிய ரோலில் நடித்துள்ளார். 

படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இதுகுறித்து விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் ஏற்கனவே ஒரு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. அவன் பாத்து சிரிக்கல பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆத்மிகாவின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் தயாரிப்பாளர்களின் நலன் கருதி தனது சம்பளத்தை குறைத்த முதல் நடிகர் என்ற பெருமையையும் விஜய் ஆண்டனி பெற்றார். செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T.D ராஜா தயாரித்துள்ளார். 

முன்னதாக விஜய் ஆண்டனியின் பிறந்தநாளில் பிச்சைக்காரன் 2 படத்தின் அறிவிப்பு வெளியானது. கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கும் பிச்சைக்காரன் 2 படத்தை தேசிய விருது பெற்ற ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.